பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

147



உற்சாகப்படுத்துவதற்காக கலைஞரிடம் நான் அறிந்த ஒரு தகவலைச் சொன்னேன். அது வெறும் தகவல் அல்ல. உண்மை. மேயராக பணியாற்றும் திரு. ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை கண்டதாக குறிப்பிட்டேன். குறைந்த பட்சம் அவருக்கு எதிராக எந்த முணுமுணுப்பும் இல்லை என்றும் அவரது கண்துஞ்சா செயல்பாடு மக்களின் கவனத்திற்குப் போய் இருக்கிறது என்றும் தெரிவித்தேன். அவர் முகத்தில் அரசியல் சோகங்களையும் மீறி ஒரு சின்னப் பெருமிதம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில், கோரைப்புற்கள் என்ற எனது சிறுகதைத் தொகுப்பை கலைஞரிடம் கொடுத்தேன். இதில் வரும் தலைப்புக் கதை 1997ஆம் ஆண்டு தினமணிக் கதிர் பொங்கல் மலரில், எழுதப் பட்டு பின்னர் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. இந்தக் கதையில் அப்போதே ஒருவேளை தமிழகத்தில் நடைபெறக் கூடிய கலைஞருக்கு எதிரான எதிர்வினைகளை சுட்டிக் காட்டியிருந்தேன். அது இப்போது பலித்து விட்டதில் மிகவும் வேதனைப் பட்டேன்.

இந்தக் கதையில், யாதவமக்களின் தலைவனான கிருஷ்ணன், அந்நியனான அர்ச்சுனனை இந்த மக்களுக்கு அறிமுகப்படுத்தி, எப்படி தனிநபர் வழிபாட்டைக் கொண்டு வந்தான் என்பதையும், இதன் தொடர்பாக யாதவகுல அழிவின் போது அத்தனை யாதவரும் ஒரு உடுக்கடி கலைஞன் வசம் மாட்டிக் கொண்டதை சிறிது சேர்த்து புராணக் கதையில் அரசியல் பொடி தூவினேன். கோரைப் புற்களால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு யாதவகுலம் மாண்டு போகிறது. இன்னும் எஞ்சியிருக்கும் கோரைப் புற்களை புதிய பூதகி , நவீன பூதங்களோடு தமிழக கடலோரம் கூட்டி வருவதாக முடித்திருப்பேன். இதில் அர்ச்சுனனாக எம்.ஜி.ஆரையும், கிருஷ்ணனாக கலைஞரையும் உருவகித்துப் படித்தால் அந்த கதைக்குள்ளே ஒரு கதை இருப்பது புரியும்.

முதல்வர் கலைஞரிடம் இந்தக் கதையை படிக்கும்படி குறிப்பிட்டேன். நான் அவரைப் பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாததை இந்த கதை மூலம் தெரிந்து கொள்ளட்டும் என்ற மனப்போக்கில் கொடுத்தேன்.