பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

என் பார்வையில் கலைஞர்



அனுப்பப் பட்டதில் எனக்கு சந்தோஷம் வரக்கூடாதுதான் ஆனாலும் வந்தது. எங்களை மட்டுமே பார்க்க கலைஞர் அனுமதித்து இருக்கிறார் என்பதில் ஒரு பெருமிதம். அதே சமயம் சி.பாவின் மரணத்தால் ஒரளவு அதிர்ச்சியுற்ற நானும் கலைஞருடன் உரையாடுவதற்காக மனதில் வரித்திருந்த உரைப் பொருள் பட்டியலை உடனடியாக நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை .

வழக்கம்போல் கலைஞர், எங்களை எழுந்து நின்று வரவேற்றார். நான் சின்னப்ப பாரதி அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். உடனே கலைஞர் தெரியுமே... இவரோட தாகத்தை படித்திருக்கேன்’ என்றார். இந்த தாகம் நாவல், மக்கள் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனை. எளிமையான நடையில் அன்றைய தஞ்சை மாவட்டத்தில் மிட்டாமிராசுகள், விவசாய தொழிலாளர்களுக்கு சவுக்கடி, சாணிப்பால் கொடுத்து கொடுங்கோன்மை செய்ததையும், இந்த கொடுமைகளை மீறி அவர்கள் போர்க்கொடி தூக்கியதையும் சித்தரிக்கும் நாவல். நிச்சயம் கலைஞருக்கு பிடித்திருக்கும்.

பிறகு கலைஞரிடம் ‘சார், இவரு நம்பூதிரிபாத் அவர்களோடு தோழமையோடு பழகுகிறவர். முதலைமைச்சரான கலைஞர் எப்படி இருப்பாரோ என்று உங்களைச் சந்திக்க தயங்கினார். நான்தான் ‘கலைஞர் இன்னொரு நம்பூதிரிபாத்... சந்தித்துத்தான் பாருங்களேன் என்று வற்புறுத்திக் கூட்டி வந்தேன்’ என்றேன். கலைஞர் சிரித்துக் கொண்டார். பின்னர் அவரிடம், அவரது அண்ணா இரங்கற்பா பிரசுரமான இலா பத்திரிகையை காட்டினோம்.

அந்த ஆங்கில மொழியாக்கத்தை ஒரு நிமிடம் மேலோட்டமாக பார்த்த கலைஞர் அந்த கவிதையில் முக்கியமான சில பகுதிகள் விடுபட்டு போய்விட்டன என்று போகிற போக்கில் சொல்வது போல் சொன்னார். உடனே மொழிபெயர்ப்பாளர் ஆக்கிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டோம் என்றும், மீண்டும் அதை முழுமையாக வெளியிடுவோம் என்றும், குறிப்பிட்டு விட்டு, கலைஞர் போய் வாருங்கள் என்று சொல்லும் முன்பே நாங்கள் எழுந்தோம். காலத்தின் அருமை கருதும் கலைஞர் எங்களை மட்டும் பார்த்ததற்கு நன்றி சொல்லிக் கொண்டோம். கலைஞரும் எழுந்து நின்று வழியனுப்பினார்.