பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

என் பார்வையில் கலைஞர்


லேசாய் சிரித்தார். அமைச்சர் துரைமுருகன், எனது கல்லூரிக் காலத்தில் இருந்தே எனக்கு பரிச்சயமானவர். மாணவ அரசியலில் எதிரும், புதிருமாக நின்றவர்கள் நாங்கள். எங்கே பார்த்தாலும் என்னோடு இன்முகமாக பேசுவார். எனது கதைகளில் ஒன்றை குறிப்பிடுவார். அன்று கூட சுபமங்களா சார்பில் இளையபாரதி வெளிக்கொண்டு வந்த கலைஞர் முதல் கலாப்பிரியா வரை என்ற நூலில் எனது நேர்காணல் நன்றாக வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அவருக்கு அன்போடு நன்றி தெரிவித்து விட்டு இன்னும் தலையை நிமிர்த்தாத முரசொலி மாறன் அவர்களை பார்த்து கும்பிடு போட்டேன். அவரோ என்னை லேசாய் நிமிர்ந்து பார்த்துவிட்டு அலட்சியப் படுத்துவது போல் மீண்டும் எழுதத் துவங்கினார். எனக்கு என்னவோ போல் இருந்தது.

இப்படி உரிமை உணர்வு மேலோங்கியதற்கு காரணமும் உண்டு. முரசொலி மாறன் அவர்கள் பல்லாண்டு காலமாக பழக்கமானவர். குங்குமம் இதழ் ஆரம்பிக்கப்பட்ட போது, அதை எப்படி பிரபலப் படுத்தலாம் என்பதற்கு என்னையும் தனியாக வரவழைத்து ஆலோசனை கேட்டவர். ஒரு தடவை ‘சமுத்திரம்! ஒரு எழுத்தாளருடைய நாவலை குங்குமத்திற்கு சரிவராது என்று நிராகரித்தோம். ஆனால், அந்த எழுத்தாளர் இது உங்களுக்காக எழுதிய நாவலாச்சே’ என்று அழாக்குறையாக சொன்னபோது அதைப் பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். உங்கள் நாவலான உயரத்தின் தாழ்வுகளை தொடர்கதையாய் பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். ஆனால், நீங்கள் தொலைபேசியில் பேசிய பேச்சைக் கேட்டதும், அதை நிராகரித்தோம்’ என்று சிரித்துக் கொண்டே நயம்பட சொன்னவர். அவர் சொன்ன விதத்தில் எனக்கு கோபமோ வருத்தமோ ஏற்படவில்லை.

புதுடில்லியில், என்னை தனது குடியிருப்புக்கு வரவழைத்து சிற்றுண்டிக் கொடுத்தவர். இன்னும் நன்றாகவே நினைவு இருக்கிறது. ஒரு சில நண்பர்களுக்கு, என்னை எழுத்தாளன் என்ற முறையில் அறிமுகம் செய்தார்.

மத்திய அமைச்சரானபோது செய்திக்காக எந்த சமயத்திலும் அப்போதைய தொலைக்காட்சி ஆசிரியரான என்னை அணுகாதவர். ஜென்டில்மேன் மினிஸ்டர். அமைச்சர் என்ற முறையில் நான் பேட்டி காண போகும்போது கூட ‘எனக்கு எந்த செய்தியும் வேண்டாம் ஆள விடுங்க சமுத்திரம்’ என்று