பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

என் பார்வையில் கலைஞர்


பேசவில்லை. ஆனாலும், நான் சொன்னதை உன்னிப்பாக கவனித்தார். ஒருவேளை, காலங்காத்தாலேயே இந்த ஆள், வம்புக்கு வரானே என்று மனதிற்குள் நினைத்து இருக்கலாம்.

இந்த மூன்று சங்கதிகளும் கலைஞரின் காதுக்கு போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவேளை எனக்கு அதிகமாக இடம் கொடுத்து விட்டோமோ என்று கூட கலைஞருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். என்னால் கலைஞர் உறவு அறுபட்டு போகும் என்று நினைப்பதற்கே ஒருமாதிரி இருந்தது.

இந்தச் சமயத்தில் தமிழ் கல்வியாளர்கள் மாநில அரசு விடுத்த தமிழ்க் கல்வி ஆணைக்கு, முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக அறிவாலயம் சென்றார்கள். இதற்கு அழைக்கப்பட்டு இருந்த, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் செந்தில்நாதன், என்னையும் அந்த குழுவில் சேரும்படி சொன்னார். எப்போதுமே அவரும், நானும் ஒன்றாக செயல்படுகிறவர்கள். ஒரேமாதிரி சிந்திக்கிறவர்கள். நானும் கலைஞரை நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்பதற்காக அறிவாயலத்திற்குச் சென்று, குழுவோடு சேர்ந்து கொண்டேன்.

அந்தக் குழுவோடு நானும், கட்சித் தலைவர் கலைஞர் அறைக்குள் சென்றேன். கலைஞர் பொதுப்படையாகப் பேசிவிட்டு குழு உறுப்பினர்களுக்கு விடை கொடுத்தார். அப்போதுதான் கலைஞர் என்னை பார்த்திருக்க வேண்டும். ‘அடடே சமுத்திரமா!’ என்று அன்புதழுவக் கேட்டார். நான் தனித்து நின்று உரையாட விரும்பாமல், குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கொண்டு வெளியேறினேன். என் மனஉளைச்சலுக்கு ஒரு விமோசனம் ஏற்பட்டது. இப்படிச் சொல்வதால் தமிழ் விவகாரத்தையும் எனது சொந்த விவகாரத்தையும் நான் இணையாக கருதுவதாக நினைக்க வேண்டாம். உண்மையை உண்மையாகச் சொல்ல வேண்டும் என்பதால் இங்கே இதைக் குறிப்பிடுகிறேன்.