பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168


கலைஞர்
முத்தமிழ் அறிஞர்
எப்பேர்பட்ட மனுசன்!


இரண்டாயிரம் ஆண்டில் மார்ச் முதல் வார வாக்கில்....

ஏவி. எம். மெய்யப்பச் செட்டியார் அவர்களின் மகளும், எனது குடும்ப நண்பருமான திருமதி. மீனா அருண் வீரப்பன் அவர்கள், என்னை அகில இந்திய குடும்பநலத் திட்டச் சங்கத்தில் கலைஞரோடு சேர்ந்து பேசவைத்தார்.

இன்று, இந்தியாவில் அரசு சாரா நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசுப் பணத்தையும், வெளிநாட்டுப் பணத்தையும் தருவித்துக் கொண்டு அவற்றிற்கு கணக்கு காட்டாமல் பொதுமக்களுக்கு சேவை செய்வது போல், பாவனை செய்து, முக்கால்வாசிப் பணததை ஓரங்கட்டும் போது, இந்த அகில இந்திய குடும்பநல திட்டச் சங்கம், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுகிற அமைப்பு. அந்தக் காலத்தில் இருந்தே குடும்பநலத் திட்டத்திற்காக அரும்பணி ஆற்றிய அமைப்பு.

விழா நாளில் ராஜேஸ்வரி மண்டபத்தில் மேடையில் கலைஞர் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார். எல்லோருக்கும் போடப்பட்ட சாதாரண நாற்காலியை வற்புறுத்தி வாங்கிக் கொண்டார். அவருக்கு வலது பக்கம் சங்கத்தின் தலைவர் என்று நினைக்கிறேன். இடது பக்கமும் இன்னொருவர்... நான் கலைஞரின் வலது பக்கத்திற்கு வலது பக்கம். என்னையடுத்து கலைஞரின் துணைவியார் திருமதி ராசாத்தி அம்மையார், இவரை அடுத்து ரஜேஸ்வரி அம்மையார்... இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதால் சரளமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நானும், ராசாத்தி அம்மாவும் வணக்கம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொல்லிக் கொள்ளாததற்கு என்னளவில் ஒரு காரணம் உண்டு.