பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XV


மக்களுக்கு விசுவாசமாக எழுதுவேன்’ என்று குறிப்பிட்டேன். ஒரு இடத்தில் கூட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அந்தப் பரிசுகளை அந்த பொன்மனச் செம்மலின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதாக என்னிடத்தில் இன்னொருவராக இருந்தால், சொல்லியிருப்பார். வட்டியும் முதலுமாக அறுவடை செய்திருப்பார்.

எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது இலக்கியத்தில் இடஒதுக்கீடு வந்து விட்டது என்று ஒரு மேட்டுக்குடி பத்திரிகை எழுதப்போய் என் சாதியினர் எப்படியோ என்னை அடையாளம் கண்டு பழனியில் நடைபெற்ற ஒரு மாபெரும் மகாசன மாநாட்டிற்கு என்னை பேச அழைத்து, பெருந்தொகை கொடுத்து கொளரவிக்க முன்வந்தார்கள். ஆனால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் குறிப்பாக தலைவராகவும், எழுத்தாளராகவும் இருப்பவர்கள் சாதிய மறுப்பாளராக இருக்க வேண்டும் என்று அன்றும் நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன். ஆகையால், அந்த மகாநாட்டிற்கு வரமாட்டேன் என்று கடிதம் எழுதிப் போட்டேன்.

என் உறவுக்காரர்களைக் கொண்ட சென்னை வியாபாரிகள் சங்கம் இதே காரணத்துக்காக என்னை அழைத்த போதும் மறுத்தேன். நான் நினைத்திருந்தால் சமுத்திரம் சமூபக் பேரவை என்ற இலைமறைவு, காய்மறைவான சாதிய அமைப்பை உருவாக்கி இன்னும் பிரபலமாகி இருக்கலாம். இப்போது என்னைக் கடுமையாகவும், கொச்சைப் படுத்தியும் பேசும் பத்திரிகைகளை ஒருகை பார்த்திருக்கலாம். ஆனால், என் கையோ எழுத்தாளக் கை. தமிழ்ச்சாதி என்ற ஒன்றைக் தவிர வேறு எந்த சாதியும் இல்லை என்று எழுத்தால் சாதிக்க நினைக்கும் கை.

1980 ஆம் ஆண்டு வாக்கில் எனது நாவலான ‘சோற்றுப் பட்டாளம்’ ஊமை வெயிலாக படமாகப் போனபோது அதற்கு இசையமைத்த இளையராஜா அவர்களின் விருப்பப்படி அவரை எனது திரைப்பட தயாரிப்பாளருடன் சந்தித்தேன். பல்வேறு நாடகங்களில் நான் பாடல்கள் எழுதி அவை வெற்றி பெற்றதால், இளையராஜாவிடம் உள்ள பரிச்சயத்தை பலமாக நட்பாக்கி அவர் மூலம் திரைப்பாடல்களை எழுத நினைத்தேன். இதனால், அப்போது நிலவிய வறுமையும் வெளியேறி, இப்போதும் மக்களிடம் இன்னும் நெருக்கமாக போக முடிந்திருக்கும். ஆனால், எங்களது சந்திப்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கொஞ்ச நஞ்சமிருந்த பரிச்சயமும் போய்விட்டது. இதனால் ஊமை வெயிலும் ஊமையாகவே ஆக்கப்பட்டது. ஆனாலும், எனக்கு இப்போதும் வருத்தம் இல்லை. சாதிப்பது எப்படி ஒரு சாதனையோ, அப்படி சாதிக்காமல் இருப்பதும் ஒரு சாதனை என்று நினைப்பவன் நான்.