பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

171



விழா அழைப்பிதழை கொடுக்காது போனது ஏன் என்று என்னை கேட்டார். நான் அவர் அப்போது ஊரில் இல்லாததால் கூரியரில் அனுப்பியிருந்ததாக தெரிவித்தேன். கூரியரில் அனுப்பியிருந்தால் வந்திருக்குமே என்று என்னை நம்பாதது போல் கேட்டார். அதில் ஒரு உரிமை இருப்பதை கண்டு கொண்டேன்.

கலைஞர் என்னைப் பார்த்து ‘அதுதான் என் துணைவியார் ராசாத்தி அம்மா’ என்று சொல்லி ஏன் பேசாமல் இருக்கிறாய் என்று மறைமுகமாக கேட்காத கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கலாம். ஆனால் அவரோ தனது துணைவியாரைப் பார்த்துத்தான் அப்படி கேட்டார். இதனால் நானும் அன்றைக்கு என் துணைவியார் திருமதி. கோகிலா சமுத்திரத்தை பற்றி பேசுவது என்று தீர்மானித்து விட்டேன். இப்படிப் பேசினேன்.

‘பொதுவாக நமது முதல்வரின் முன்னிலையில் பேசுவதற்கு அனைவருமே அஞ்சுவார்கள். அந்த அளவிற்கு கலைஞர் அவர்களது பேச்சை மனதில் உள்வாங்கிக் கொண்டு குட்டுவதா, தட்டுவதா, தட்டிக் கொடுப்பதா என்று தீர்மானிப்பார். ஆனால், கலைஞரின் முன்னிலையில் பேச நான் தயங்குவது இல்லை’

‘இப்போது நான் பயப்படுவது பார்வையாளர் இருக்கையில் இருக்கும் என் துணைவியாருக்குத்தான். வள்ளலார் மக்கள் நேயப் பேரவை துவக்க விழாவிற்கு தலைமை தாங்கிய நான் கலைஞரின் வருகையை பொருட்படுத்தாது போல் அங்கும் இங்கும் சுற்றியதாக என் துணைவியார் என்னைக் கண்டித்தார். ‘எப்ப பேர் பட்ட மனுசன்! அவர். அவர் முன்னால அப்படி நடந்துகிறீங்களே’ என்று சாடினார். கலைஞருக்கு, தென்மாவட்ட மண்வாசனை பாணியில் எப்பேர்ப்பட்ட மனுசன் என்று என் துணைவியார் கொடுத்திருக்கும் பட்டம் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் டாக்டர், முத்தமிழ் அறிஞர், தமிழனத்தலைவர் போன்ற பட்டங்களுக்கு இணையானது’

கலைஞர் என் பேச்சை பெரிதும் ரசித்தார். நான் பேசி உட்கார்ந்ததும் ராசாத்தி அம்மையர், நூற்றுக் கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், முன்பின் பார்த்தறியாத என் மனைவியை கண்டு பிடித்து ‘எப்படி வெட்கப்படுகிறாங்க பாருங்க’ என்றார்.