பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

181


வைகுண்டர் தலைப்பாகை
வள்ளலார் வழிபாடு
கலைஞரே முன் நிற்க...



சென்ற ஆண்டில் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பு வித்தியாசமான காரணங்களுக்கானது. அதோடு ஐந்தாம் தேதி சண்முகநாதன் அவர்களை அணுகினால் மறுநாள் ஆறாம் தேதியன்று, கலைஞரை ஏழாம் தேதி சந்திக்கலாம் என்று செய்தி வந்தது. பொதுவாக எனது வேண்டுகோட்களுக்குப் பிறகு, கலைஞரை சந்திக்க நான்கைந்து நாட்களாவது ஆகும். ஆனால், இந்தத் தடவை ஒருநாள் இடைவெளியில் எனக்கு அனுமதி கிடைத்தது. கலைஞரும் என்னைப் பார்க்க ஆவலாக இருக்கிறார் என்று அனுமானித்துக் கொண்டேன்.

மூன்று முக்கிய காரணங்களுக்காக கலைஞரை சந்தித்தேன். முதலாவது அரசியல் நிகழ்வுகள். இரண்டாவது சாகித்திய அக்காதெமி சமாச்சாரங்கள். மூன்றாவது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒரு அதிகாரியின் நடத்தையைச் சுட்டிக் காட்டி தமிழக அதிகார வர்க்கத்தை அடையாளப் படுத்த வேண்டும் என்பது.

முரசொலி மாறன் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது, தொலைக்காட்சியில் பார்த்த கலைஞரில் இருந்து நான் சந்தித்த கலைஞர் வித்தியாசமாக இருந்தார். உடனே, எடுத்த எடுப்பிலேயே ‘பரவாயில்லை சார், கும்முன்னு இருக்கீங்க, இப்படி உங்களப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்குது’ என்று சொன்னேன். இந்த ‘கும்’ என்ற வார்த்தை எனக்கு எனது சேரித் தோழர்கள் கொடுத்தது. இதை பயன்படுத்தி இருக்கக் கூடாதுதான். ஆனாலும், மொழிவாசனை யாரை விட்டது?