பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

189



அடுத்தபடியாக பெருந்தலைவர் காமரசரைச் சொல்லலாம். பெருந்தலைவருக்கு இந்த வசவுகள் காதிலேயே ஏறாது. ஆனால், கலைஞர் அப்படியல்ல. சென்சிட்டிவ் என்பார்களே அந்த மாதிரியான வகை. தொட்டால் சிணுங்கி வகைதான். அவர் இழிவு செய்யப்படும் போதெல்லாம், இந்த உணர்ச்சி இலை சுருங்கி போயிருக்கும் என்பது அவரைப் போன்ற எனக்கும் புரியும். ஆனாலும், இவர் அந்த இலைகள் சுருங்கும் போதெல்லாம், அவற்றைத் தாங்கும் செடியாகி விடுகிறார். இந்தச் செடியில் எத்தனை இலைகளைதான், எதிரிகளால் சுருங்க வைக்க முடியும்?

கலைஞர், டில்லி ஆட்சியாளர்களுக்கு பயப்படுவதாக அன்று முதல் இன்று வரை ஒரு குற்றச்சாட்டு உண்டு. அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை என்பதை அறிந்தவர்தான். இதனால், தனக்குள் இருக்கும் ஒரு போராளியை அவர் மறந்து விடுவதும் உண்டு. அதே சமயம், சந்தர்ப்பச் சூழல் அந்தப் போராளியைச் சீண்டும் போது அரசியல்வாதி மறைந்து அந்தப் போராளியே விசுவரூபம் எடுப்பார். இதற்கு நெருக்கடி காலமே சாட்சி.

பெற்ற பிள்ளை சிறையில் சித்ரவதை செய்யப்பட்ட போதும், கட்சிக்காரர்கள் படாதபாடு படுத்தப்பட்ட போதும் கலைஞருக்குள் இருந்த போராளி வெளிப்பட்டு விசுவரூபம் எடுத்தார். நெருக்கடிகால் ஆட்சிக்கு சவாலிட்டார். முன்னாள் அமைச்சர் ராஜாராம் அவர்களின் தம்பியும், சமூகச் சிந்தனையாளருமான டாக்டர் காந்தராஜ், கலைஞரிடம் தான் உடனிருந்து கண்ட இந்த போராளி அனுபவத்தை என்னிடம் சொல்லிச் சொல்லி மெய்மறப்பார். ஆனாலும், இதில் ஒரு வேடிக்கை அல்லது விபரீதம் என்னவென்றால், இயல்புநிலை திரும்பும்போதெல்லாம் கலைஞரை ஆக்கிரமித்த அந்த போராளி அடங்கி ஒரு ஒரு பொதுமைவாதியே தென்படுவார். இதுவே கலைஞரின் பலம். இதுவே கலைஞரின் பலவீனம். தமிழகத்திற்கும் சேர்த்துதான்.

அரசியலில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்படாமல் யதார்த்தமான முடிவுகளை மேற்கொள்ளும் கலைஞர் தோழமை என்று வந்துவிட்டால் அவர் தொண்டர் அடிமையாகி விடுகிறார். லட்சோப லட்சம் கூட்டத்திற்கு மத்தியிலும் அவருள் ஏதோ ஒரு தனிமை தனித்துவமாய் நிற்கிறது. இந்தத் தனித்துவத்தை மறைக்கும் அரசியல் திரை விலக்கப்பட்டால் அதுவே ஒரு ஆன்மீக வடிவமாக வெளிப்பட்டிருக்கும்.