பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

என் பார்வையில் கலைஞர்



நான் அந்த முகங்களை பார்க்க விரும்பாது சுவரேங்கும் மாட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தேன். எதிர்ப்புறச் சுவரில் கலைஞர் தென்னை மரத்தில் லேசாய் சாய்ந்து நிற்பது போன்ற ஒரு வரவேற்பு இதழ். அதற்கு கீழே -

"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கோலென வேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான்தருத லால்"

என்று எழுதப்பட்டிருந்தது.

இன்னொரு பகுதியில் இதேமாதிரியான வெண்பாவில் ‘சங்கத் தமிழ் தந்த கலைஞரே’ என்ற வாசகம் என்னைக் கவர்ந்தது. இந்த ஒளவையார் பாடலை, மூன்றாவது வகுப்புப் படிக்கும் போது என் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததும் மறுநாள் அதை ஒப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டதும், அன்றிரவு நான் இந்த பாடலை மனப்பாடம் செய்ததும் நினைவுக்கு வந்தன. மறுநாள் அதிகாலையிலேயே மனப்பாடம் செய்திருக்க மாட்டான் என்று நான் அனுமானித்த எனது பெரியப்பா மகனை எழுப்பி இந்த பாடலை ஒப்பித்தப் போது அவன் ஒரு திருத்தம் சொன்னான். அப்போதே எனக்கு கர்வபங்கம் ஏற்பட்டது. இந்தப் பாடல் தொண்டர்களுக்கு, கலைஞர் செய்த தொண்டுகளை சொல்லாமல் சொல்வது போல் தோன்றியது.

அந்த வரிகளில் இருந்து கண்களை விலக்கி தந்தை பெரியார் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர் போன்ற தலைவர்களுடன் கலைஞர் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களைப் பார்த்தேன். அன்றுமுதல் இன்று வரை கலைஞருக்கு வழங்கப் பட்ட பல்வேறு வரவேற்பு படங்களும், சுவர் இருக்கும் இடம் தெரியாமல் இடையிடையே வெண்மையைக் காட்டிக் கொண்டு காட்சி காட்டின.

இந்தச் சமயம் பார்த்து வெளியே மக்கள் கூட்டம் பெருத்து விட்டது. ஆண்களும் பெண்களுமாய் ஆளுக்கொரு மனுவை கையில் வைத்துக் கொண்டு அமைதியோடு நின்றார்கள் அவர்களை ஒழுங்கு செய்து விட்டு அமைச்சர் ஆர்க்காட்டு வீராசாமி அவர்கள் உள்ளே வந்தார். கண்ணில் தென்பட்ட என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். இரண்டு வினாடிகள் கழித்து மீண்டும் வெளியே பார்த்தார். எனக்கு என்னமோ 1990ஆம்