பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

என் பார்வையில் கலைஞர்


விசாரித்துப் பார்த்ததில், அவர் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்று அறிந்தேன். ஒரு முதல்வரை எந்த மாதிரி சந்திக்க வேண்டும் என்கிற உடை நாகரீகம் கூட இல்லாதவர். இந்த மாதிரி ஆட்களுக்கு கலைஞர் இன்னும் இடங்கொடுக்கிறாரே என்று எனக்கு இப்போது கூட வருத்தம் உண்டு. அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளி வரவேற்பறைக்கு வந்தேன். கலைஞரின் முன்னைய அமைச்சரவையில் பணியாற்றி, இப்போதும் தொடர்ந்து அமைச்சர்களாக இருக்கும் திருவாளர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் தென்பட்டார்கள். பழைய தோழரான துரைமுருகன் என்னைப் பார்த்து நட்போடு சிரித்தார். பொன்முடி பேசவில்லை. ஒருவேளை, ஒரு காலத்தில் கலைஞரோடு, நான் நடந்து கொண்ட விதம் இப்போது அவருக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

அத்தனை பேர் மத்தியிலும் நான் தனிமையில் தவித்தேன். இந்தச் சமயத்தில் லேசாய் உள் வளைந்த அய்ம்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் என்னிடம் வணக்கம் போட்டார். நான் திருதிரு என்று விழித்த போது அவர் ‘உங்களை எனக்குத் தெரியும் சமுத்திரம் சார். என் பெயர் மணி’ என்றார். இந்த மணி, கலைஞரின் வேலையாள் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். நெருக்கடிக் காலத்தில் காவல்துறையினரால் மிகவும் கொடுமைப்படுத்தப் பட்டவர் என்றும் அறிந்து இருக்கிறேன். ஆனால், பார்வையும் தோரணையும் இவரை வேலையாளாகக் காட்டாமல், வீட்டு ஆளாகவே காட்டியது. இந்த அளவிற்கு கலைஞரும் அவரது குடும்பத்தினரும் அவருக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமும் இவரது விசுவாசமும் அந்த மணியைச் சுற்றி ஒரு ஒளிவட்டமாய் எனக்குத் தோன்றியது. நான் பதிலளித்தேன்.

‘உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் மணி. எவ்வளவு காலமா கலைஞர் வீட்ல இருக்கிங்க?’

‘1953ஆம் ஆண்டு சிறுவனா வந்தேன் சார். கலைஞரை அப்பப் பார்த்தவன் இன்னும் பார்த்து முடிக்கல. பார்த்துக் கொண்டே இருக்கேன் சார்’

‘தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பன் சொன்னதுதான், எனக்கு நினைவுக்கு வந்தது.’ நானும், கலைஞரை காதலாகியும், மோதலாகியும் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். ஆனாலும், இன்னும் நான் பார்த்து முடியவில்லை.