பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

என் பார்வையில் கலைஞர்


தொலைக்காட்சி பெட்டியில் ஒரு கண்ணும், நம் மீது ஒரு கண்ணும் போட்டு நாம் பேசுவதை கேட்பார்கள். நாம் நமது பேச்சில் உச்சத்திற்கு செல்லும் போது அவர்கள் தொலைபேசி எண்களைச் சுழற்றுவார்கள். நிமிடக் கணக்கில் பேசுவார்கள். பிறகு நம்மைப் பார்த்து ‘என்னவோ சொன்னீர்களே’ என்பார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளையும் தலைவர்களையும் பார்த்து எனக்கு அத்துபடி ஆகிவிட்டது. சிலரிடம் சொல்ல வந்த தகவல்களை சொல்லாமலே வெளியேறி இருக்கிறேன்.

கலைஞர் அப்படியல்ல. எனக்கு பத்து நிமிடம் கொடுத்தால் அந்த பத்து நிமிடமும் தொலைபேசி மணி அடிக்காது. இண்டர்காம் இரையாது. கலைஞரும் எதையோ நினைவிற்கு கொண்டு வந்ததுபோல், அரக்கப் பரக்கப் பார்க்க மாட்டார். எவரும் அந்த அறைக்குள் நுழையவும் முடியாது. ஒரு முதல்வருக்கு ஒரு நிமிடத்திற்கு குறைந்தது மூன்று தொலைபேசிகளாவது வரும். இந்த சமானிய சமுத்திரத்திற்கே ஒரு நாளில் பல டெலிபோன்கள் வரும்போது, முதல்வரும், கட்சித்தலைவருமான கலைஞருக்கு வரும் எண்ணிக்கை குறித்து குறிப்பிட வேண்டியது இல்லை. ஆனால், கலைஞரோ அவற்றை வடிகட்டி வைக்கச் சொல்கிறார் என்பதே உண்மை. பார்வையாளர்களுக்கு கிடைக்கும் நேரத்தை அவர் வீணடிக்க விரும்பியதில்லை. அதே சமயம் சந்திப்பு நேரம் கூடிவிட்டால் இண்டர்காம் லேசாக இரையும். இங்கிதம் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சந்திப்புகளில் ஒன்றே ஒன்றில் தவிர கலைஞர் என்னைப் போகலாம் என்று சொன்னதில்லை.

பிறகு நான் எந்த நோக்கத்திற்கு வந்தேனோ, அந்த நோக்கத்தை கலைஞரிடம் சொல்கிறேன். அப்போதுதான் வெளியான எனது சிறுகதை நூலான ஒரு மாமரமும் மரங்கொத்தி பறவைகளும், எனது கட்டுரைத் தொகுப்பான எனது கதைகளின் கதைகள், அயோத்தி மசூதி இடிபட்டபோது நெல்லை மாவட்டத்தின் இசுலாமிய கிராமமான மேட்டுப்பாளையம் எப்படி மதவெறி உன்மத்தர்களால் சுற்றி வளைக்கப்பட்டது என்பதை விளக்கும் நாவலான மூட்டம் ஆகிய மூன்று நூல்களையும் கலைஞர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே சமயத்தில், முதல் அமைச்சர் என்பதால் அவரை அழைக்கவில்லை என்பதையும் தெளிவாக்குகிறேன்.