பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

என் பார்வையில் கலைஞர்


சுபாசுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் தனக்கு தெரியாது என்றும் சண்முகநாதனிடமே நான் பேசிவிடலாம் என்றும் பரிந்துரைத்தார். எனக்கு சண்முகநாதனிடம் பேசப் பயம். ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை ‘ என்கிற கதையாகிவிடக் கூடாதே என்கிற அச்சம். சும்மா கிடக்கிற சங்கை ஊதிவிடக் கூடாதே என்கிற முன்யோசனை.

என் துணைவியாருக்கு டெலிபோன் செய்தால் கலைஞரின் நிகழ்ச்சி ரத்தாகி விட்டதாக யாரும் தெரிவிக்க வில்லை என்றார். ஆனாலும், யாரோ ஒருவர் எனது ராமநாதபுர அலுவலக எண்ணை வாங்கியதாகவும் குறிப்பிட்டார். எதற்கு என்று தெரியாதாம். இவரும் கேட்கவில்லையாம். அவரும் சொல்ல வில்லையாம். என்னுடைய கோபத்தை மனைவியிடம் காட்டுவது போல் தொலைபேசியை டக்கென்று வைத்தேன். பின்னர் தோழர் செந்தில்நாதனுடன் தொடர்பு கொண்டேன். அவர், தான் பேசவில்லை என்றார். எனது ஆதங்கத்தைத் தெரிவித்தபோது கலைஞர் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டார் என்றார். இது எனக்கும் தெரியும். ஆனாலும், விவகாரம் என்னைப் பற்றியது என்பதால் ஒரு டாக்டருக்கு, தனது நோயை பற்றி ஏற்படும் சந்தேகம் எனக்கும் வந்தது.

ஒருவேளை சண்முகநாதன் இல்லாமல் வேறு நாதனாக இருக்கலாமோ. டில்லியில் தமிழ்ச்சங்க துணைத் தலைவராக பணியாற்றிய என் நண்பர் விசுவநாதனா? அல்லது என்னோடு கல்லூரிப் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டவரும் அமைச்சராக இருந்து விட்டு அரசியலில் இருந்து கவுரவமாக விலகிக் கொண்ட வேலூர் விசுவநாதனா? என் பள்ளித் தோழன் லோகநாதனா? எனது இனிய நண்பரும் தினத்தந்தியின் அப்போதைய செய்தி ஆசிரியருமான சண்முகநாதனா? சென்னை வானொலியில், என்னைச் சொல்லுக்குச் சொல் அண்ணா அண்ணா என்று அழைக்கும் இளைய சகா சாமிநாதனா? அல்லது அற்புதமான இலக்கிய விமர்சகரான பேராசிரியர் இராம. குருநாதனா? அத்தனை நாதன்களையும் நினைத்துப் பார்த்தேன். இதுவரை எந்த நாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

விழா நாள் நெருங்கியது என்பதை விட நெருக்கியது என்றே சொல்லலாம். கலைஞர் வருவதும் உறுதியாகி விட்டது. ஆனாலும், கடைசி நேரத்தில் வராமல் போய்விடுவாரோ என்று