பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

47


பொறுக்காத சில பேர்வழிகள் எனது சிறுகதைகள், நாவல்களில் வரும் உரையாடல்கள் ஓசை நயத்தோடு இருப்பதாக குற்றம் சாட்டுவதாக நினைத்து தங்களுக்கு தெரியாமலே எனக்கு புகழாரம் சூட்டினார்கள். இந்த ஓசை நயம் நான் என்னையும் மீறி கலைஞரிடம் இருந்து கடன் வாங்கியது.

இன்னும் ஒரு சுவையான அனுபவத்தை சொல்லியாக வேண்டும். கலைஞரின் தமிழ் என் மூலம் வெளிப்பட்டு பல இளைஞர்களையும், இளம் பெண்களையும் காதலர்களாய் மாற்றியது. அந்தக் காலத்தில் காதல் என்பதே அப்போதுதான் அரும்பத் துவங்கியது. அதற்கு முன்பு காதலில் சிக்கியவர்கள் குறிப்பாக பெண்கள் பிடிபட்டால், அவர்கள் இரவோடு இரவாக எரித்துக் கொல்லப்படுவார்கள். ஆண்களாக இருந்தால், மொட்டை அடிக்கப்பட்டு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைகளில் ஏற்றப்படுவார்கள்.

உதாரணமாக, எங்கள் ஊர் வாத்தியாருக்கு வெளியூரில் கல்யாணம். தாலிகட்டிய உடனே, அவருடைய மனைவி அவருக்கு தேநீர் கொடுத்தாளாம். உடனே எங்க ஊர்ப்பக்கம் ‘இப்படியும் ஒரு பொம்பளையா’ என்று வக்கணை பேசுவார்கள். திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்று தாய் வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண் கூட, பிறந்த ஊரில் கம்மாகரை வரைக்கும் கட்டிய கணவனோடு உல்லாசமாகப் பேசி நடப்பாள். ஊருக்குள் நுழைந்ததும் அவர் யாரோ தான் யாரோ என்பது மாதிரி ஒரு பர்லாங்கு எட்டி நடப்பாள்.

இந்தப் பின்னணியில், திராவிட இயக்கம் காதலிலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதுதான் அறிமுகமான பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு பெட்டிக் கடை வைத்திருப்பவர்களும், வயர் மேன்களும், டெய்லர்களும் கதா நாயகர்கள். விவசாயக் கூலிப் பெண்களுக்கு வில்லுப் பாட்டாளிகளும், மேடை நாடக நடிகர்களும் நாயகர்கள். எஸ்.எல்.சி பெயிலான பயல்களுக்கு ஹையர் கிரேடு எனப்படும் எட்டு படித்த பயிற்சி பெற்ற ஆசிரியைகள் நாயகிகள். வேலை பார்க்கும் படித்த இளைஞர்களுக்கு செகண்டரி கிரேடு எனப்படும் உயர்தர ஆரம்பப்பள்ளி ஆசிரியைகள் நாயகிகள்.

இப்படிப்பட்ட சூழலில் பெரும்பாலான இளைஞர்களுக்கு எனக்கு நன்றாக எழுத வரும் என்பது எப்படியோ தெரிந்து