பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

49


நடித்திருக்கிறேன். எனக்கு சிவாஜி போலவே வசனம் பேசுபவன் என்றும், கருணாநிதி போலவே வசனம் எழுதுகிறவன் என்றும் ஏகப்பட்ட நல்ல பெயர். ஆகையால், கலைஞர் அந்த வயதிலேயே தமிழை பொறுத்த அளவிலாவது என் வழி காட்டியாகிவிட்டார். ஆனாலும், வழியைத்தான் பார்த்தேனே தவிர வழிகாட்டியை பகைமையுடன் ஒதுக்கி விட்டேன்.

சென்னையில் சர் தியாகராய கல்லூரியில் நான் படித்த போது, திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் இளைஞர்கள் வடசென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் என்ற ஒரு பத்திரிகையை நடத்தினார்கள். அதில் திராவிட இயக்கத்தை கிண்டல் செய்து ஆசிரிய எண்சீரடி விருத்தத்தில் நான் ஒரு கவிதை எழுதி அது பிரசுரமாயிற்று. அப்போது காங்கிரஸ் மாணவரான செந்தில்நாதனின் அண்ணன் ராஜா, என்னை அந்த பத்திரிகைக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். பின்பு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்களின் அறிமுகமும் கிடைத்தது. இந்த பலத்தில் பல்வேறு அரசியல் மேடைகளில் பேசினேன். அண்ணாவை கிண்டலடித்து அருமை நண்பர் கரிகாலன் எழுதிய ஒரு நாடகத்திற்கு நான் பாடல் எழுதி அது பிரமாதமாகவும் விளம்பரம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மகாநாட்டில் பெருந்தலைவர் காமராசர் முன்னிலையில் அடுக்கு மொழியில் பேசினேன். தேசிய முழக்கத்தில் எழுதிய கவிதையை அப்படியே ஒப்பித்தேன். காமராசர் பரவசமாகி விட்டார். அதிக பிரசங்கித் தனமாக பேசுகிறவர்களை மேடையிலே சட்டையைப் பிடித்து இழுக்கும் பெருந்தலைவர் என் பேச்சுக்கு கிடைத்த பலத்த கைதட்டல்களால் மகிழ்ந்து போனார். அவர் பேசும் போது ‘எங்க கிட்டேயும் அடுக்கு மொழி பேசறவன் இருக்கான், இவன் கூட பேசறதுக்கு வரியா’ என்று அறைகூவல் விடுப்பது போல் பேசினார்.

இந்த வெற்றிக்கு காரணம் கலைஞரின் தமிழே எனது பேசும் பாணி வித்தியாசமானது என்றாலும் நான் ‘அடக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டது, மடக்கப்பட்டது’ என்ற அடுக்கிக் கொண்டே போவேன். இது கலைஞர் தன்னையறியாமல் தந்தது. நான் என்னையறியாமல் பெற்றது. இந்தத் தமிழை வைத்தே அண்ணாவின் வீட்டு முன்பு அவரையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். மறுநாள் அண்ணா இருந்த மேடையில் ஒரு திமுக

எ. 4