பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

என் பார்வையில் கலைஞர்


பேச்சாளர் அப்போது நெல்லை சமுத்திரமாக அறியப்பட்ட என்னை கடுமையாகச் சாட அண்ணாவோ பேச்சாற்றல் மிக்க அந்த இளைஞர் என் பக்கம் வந்தால் அவரை தலையில் வைத்து தாங்குவேன் என்பது மாதிரி பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களால் சல்லிக்காசு எனக்கு பிரயோசனமில்லை என்று தெரிந்தும், என்னால் அண்ணாவின் பக்கம் தாவமுடியவில்லை. காரணம் விவாதமும், எதிர்விவாதமும் ஒரு கட்டத்தில் சடுகுடு ஆட்டமாகி விடுகிறது. இதில் உண்மை வெல்ல வேண்டும் என்பதற்கு பதிலாக தீயவைகளை பயன் படுத்தியாவது தனது அணி வெற்றிப் பெற வேண்டும் என்பதே மேலோங்குகிறது.

இந்த அரசியல் சடுகுடு ஆட்டத்தில் நான் தேசிய அணியில் இருந்தேன். அந்தக் காலத்தில் திராவிட நாடு, நம்நாடு, முரசொலி, தென்றல், இனமுழக்கம் போன்ற ஏகப்பட்ட திமுக பத்திரிகைகளை நான் படிப்பதுண்டு. சிலம்புச் செல்வரின் செங்கோல், ஜீவாவின் தாமரை போன்ற இதழ்களையும் படிப்பதுண்டு. அந்த காலத்தில் ஒவ்வொரு கட்சி கிளை அலுவலகங்களிலும் தினமணி, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளும், கட்சி பத்திரிகைகளும் வைக்கப் பட்டிருக்கும். காங்கிரஸ் பேச்சாளன் என்று அறியப்பட்ட நான், வடசென்னையில் திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று பல்வறுே பத்திரிகைகளை படிப்பேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அந்த அளவுக்கு சர்வக்கட்சி சமரசம் நிலவியது.

வடசென்னையில் உள்ள சர்தியாகராய கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தமிழ் மாணவர் மன்ற சார்பாக உரையாற்றிய போது, அவரது பேச்சு திராவிட மயமாக இருந்ததால் அதை ஆட்சேபித்து முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த தேசிய மாணவனான நான் ஒற்றை மனிதனாய் வெளிநடப்பு செய்தேன். என்னைத் தவிர எல்லோருமே திமுக மாணவர்கள். ஒருவர் கூட என்னைக் கேலி செய்யவில்லை. என்னுடைய வெளிநடப்பு அவர்களுக்கு பிடிக்கவில்லை. என்றாலும் அதற்கு மரியாதை தெரிவித்தார்கள்.

அந்தக் கல்லூரியில் தமிழ் மாணவர் மன்றத்திற்கு என்னையே தலைவராகவும் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே தமிழ்