பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

57


கொடுத்து மேடைதோறும் பேச வேண்டும் என்றார்கள். அப்போது பத்திரிகை தணிக்கை செயல்பாட்டில் இருந்ததால் எங்களது அரசியல் பேச்சு செய்திகளானது இல்லை. எனக்கு இது அதிகமாக பிடிக்கவில்லை என்றாலும் பொது வாழ்க்கையில் ஊழலற்ற நிலைமை வரவேண்டும் என்ற காரணத்திற்காக மேடையில் ஏறியதும் கலைஞர் அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். அதேசமயம் மேட்டுக்குடியான மத்திய மாநில உயர் அதிகாரிகள் கலைஞரை விமர்சிக்கும் போது, என் ரத்தம் கொதித்தது.

ஒரு தடவை, மத்திய, மாநில மக்கள் தொடர்பு அதிகாரிகளின் கூட்டம் ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் சர்வ வல்லமை மிக்க ஆலோசகர் தவே அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர் பேசி முடித்ததும் நான் ‘நெருக்கடி காலத்தை சாக்காக்கி காவற்துறையினரும் இதர அதிகாரிகளும் தங்கள் மாமூலைக் கூட்டிக் கொண்டார்கள். மக்கள் மத்தியில் ஒரு முணுமுணுப்பு இருக்கிறது’ என்றேன். இது தவேக்கு பிடிக்கவில்லை. கோள் சொல்லலாகாது என்றார். உடனே, என் எதிர்ப்பை காட்டும் வகையில் அவர் முன்னால் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வதுபோல் பத்து நிமிடம் வெளியே போனேன். இதனால் எனக்கு திமுக முத்திரை குத்தப்பட்டு என்னை அந்தமானுக்கு மாற்ற வேண்டும் என்று சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள் குழு அமைச்சரவைக்கு பரிந்துரைத்து அதுவும் ஆணையாகப் போன நேரம். எப்படியோ செய்தி தெரிந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அப்போதைய பொதுச் செயலாளர்களில் ஒருவரான என் இனிய தோழர் ஏ.கே. சண்முகசுந்தரத்தை அணுகினேன். அவர் அந்த ஆணை வராமலே பார்த்துக் கொண்டார்.

நெருக்கடிக்கால பத்திரிகை தணிக்கை அதிகாரிகள் குறிப்பாக இலக்கியவாதியான வெங்கட்ராமன் என்பவர் முரசொலியின் சாதுரியத்தை அதன் பின்னால் உள்ள கலைஞரின் திறமையை பாராட்டுவார். பத்திரிகைகள் முன்கூட்டியே தனது செய்திகளையும், லே அவுட்களையும் தணிக்கை குழுவிடம் காட்டியாக வேண்டும். தணிக்கை குழுவின் ஒப்புதலுக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக வேண்டும் என்ற இரும்புக் கரம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. முரசொலி