பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

என் பார்வையில் கலைஞர்


பத்திரிகையும் தணிக்கைக்கு வரும். ஆனால், கலைஞரோ ஒரு சில செய்திகளில் தணிக்கை அதிகாரிகளின் கண்களை மறைத்து விட்டார். சிறையில் எவரெல்லாம் கைதிகளாக இருக்கிறார்கள் என்று கூட பத்திரிகைகள் வெளிப்படையாக எழுத முடியாத நேரம். இந்தச் சமயத்தில் கலைஞரின் முரசொலியில் அண்ணா சமாதிக்கு வர இயலாதவர்கள் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியமானவர்களின் பெயர்களை விலாவாரியாக வெளியிட்டார்.

சென்னை தொலைக்காட்சியிலும், வானொலியிலும் கலைஞரை வில்லத்தனமாக பல தலைவர்கள் சித்தரித்தார்கள். திருப்பி பதிலளிக்க கலைஞருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலே அவரோடு கூடிக் குலாவியவர்கள் கூட இந்த ஊடகங்களில், கலைஞரை கடுமையாகவும், கேவலமாகவும் சித்தரித்து பேசினார்கள். இந்த மாதிரி சமயங்களில் கலைஞரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நான் நினைத்தபோது எனக்கு கலைஞர் மீது அனுதாபம் ஏற்பட்டது. அந்த அனுதாபமே அன்பானது.

வெந்த புண்ணில் வேலை பாய்ப்பது போல், வள்ளுவர் கோட்டத்தைக் கட்டிய கலைஞருக்கு அங்கே இடமில்லாமல் போய்விட்டது. வள்ளுவத்தின் மாண்புகளையும் அதில் உள்ள நவீனத்துவங்களையும் தக்காரும் மிக்காரும் இல்லாமல் இந்த கோட்டத்தைக் கட்டிய கலைஞர் அங்கே இகழப்பட்டார். வள்ளுவர் கோட்ட திறப்பு விழாவில் பேச்சாளர்கள் அனைவரும் கலைஞரை கேவலப்படுத்தி சித்தரித்தார்கள். இதை உவமை கவிஞர் சுரதா கடுமையாக எதிர்த்து ஒரு ரகளையே ஏற்படுத்தி விட்டார். இது கண்டு நானும் ஒரு முழுத் தமிழனானேன். கவிஞர் சுரதா இப்போது கோமாளித்தனமாக பேசிவிடுகிறார். ஒரு கட்டத்தில் காலடி கலாச்சாரத்திலும் சிக்கிக் கொண்டார். ஆனாலும் அன்று தன்னுடைய உயிரைப் பற்றி கவலைப் படாமல் அவர் எதிர்ப்பு காட்டியது இன்னும் என்னை வீறுகொள்ளச் செய்கிறது.

இதனால், நான் கலைஞரை மறுபரிசீலனை செய்யத் துவங்கினேன்.