பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

59


கலைஞர் வீட்டில்
ஒரு
சமுத்திரக் கூச்சல்



1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திட்டம் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்று சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் உதவி செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.

இந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் செய்திப் பிரிவில் ஏற்பட்ட குழப்பத்தை சமாளிக்க நான்தான் சரியான அலுவலர் என்று நினைத்து டில்லி மேலிடம் என்னை அந்த நிலையத்தில் நியமித்தது. இந்தச் செய்திப் பிரிவு இப்போது போல் ஒழுங்கு செய்யப்படாமல் கிட்டத்தட்ட பைத்தியக்கார மருத்துவமனை போல் தோற்றம் காட்டியது.

இந்த நிலையத்தில் முக்கால்வாசிப்பேர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரின் தீவிரமான, அதே சமயம் தெளிவான ஆதரவாளர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் அவர்கள் செல்வி ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு வெள்ளோட்டமாக ஏதோ ஒரு விழாவில் அவரை குத்து விளக்கேற்றச் செய்தார். கலைஞரின் தீவிர பக்தரான ஒரு எடிட்டர் இந்த விளக்கு நிகழ்ச்சியை துண்டித்து விட்டார். இது என் கவனத்திற்கு வந்த போது, தேசிய செய்தி ஒளிபரப்பில் குத்துவிளக்கு இத்தியாதிகள் செய்திகளாகாது என்பதால், அந்த வெட்டை ஏற்றுக் கொண்டேன். இதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு கடுங்கோபம்.

மறுநாள் கோபத்துக்கான இந்தக் காரணத்தை வெளிப்படையாக சொல்லாமல் வேறு காரணங்களைக் கூறி தொலைக்காட்சியை பகிஷ்கரிப்பதாக அறிவித்தார். தமிழக அரசு விழாக்களை படமெடுப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்தார்.