பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

61



என்று கருதப்படுகிற சகுந்தலா தேவி, தலைவிரி கோலமாக ‘மகாராஷ்டிர கயுதே’ என்று திட்டிக் கொண்டு இருக்கிறார். அத்தனை ஊழியர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். சிலர் ‘மேடம், மேடம்’ என்று தாஜா செய்கிறார்கள். விசாரித்துப் பார்த்ததில், தன்னை கணித மேதையாகக் காட்டிக் கொண்ட சகுந்தலா தேவி, எங்கள் இயக்குநர் அறைக்குள் நுழைந்து தொலைக்காட்சியில் தனக்கொரு நிகழ்ச்சி தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இயக்குநர் தனது இயலாமையை அவருக்கு விளக்கியிருக்கிறார்.

அப்போது கர்நாடக மாநிலத்திலும் தொலைக்காட்சி நிலையம் இல்லை. இதனால், இந்த அம்மையாருக்கு ஒரு நிகழ்ச்சி கொடுக்க வேண்டும் என்று இந்த இயக்குநரே மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த அம்மையார் இந்திரா காந்திக்கு எதிராக தேர்தலில் போட்டி இட்டதை மனதில் வைத்து, இவரது முகமே தொலைக் காட்சியில் தெரியக் கூடாது என்று மேலிடம் ஆணை போட்டது. இதைச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், எங்கள் இயக்குநர் இவரிடம் மென்மையாகப் பேசி சமாளிக்கப் பார்த்திருக்கிறார். ஆனால், இவரது கொடூரமான ஆபாசமான வார்த்தைகளால் அதிர்ந்து போன இயக்குநர், எப்படியோ அறை வாசலைத் தாண்டி இரண்டாவது மாடிக்கு சென்று ஒரு அதிகாரியின் அறைக்குள் ஒளிந்து கொண்டார்.

சகுந்தலா தேவியோ அப்போதே அங்கேயே நிகழ்ச்சி கொடுக்கவில்லை என்றால் நடப்பது வேறு என்று மிரட்டுகிறார். இடையில் சென்ற நான், எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். என்னுடைய நயவுரை அவருக்குப் புரியவில்லை . பிறகு மரியாதயா போடி இல்ல போலீஸ்ல ஒப்படைப்பேன் என்று கத்தினேன். இந்த இயக்குநரிடம் ஆதாயம் தேடிய அதிகாரிகள் சும்மா இருந்த போது, சில தலித் ஊழியர்கள் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். சகுந்தலா தேவி சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவிட்டார்.

இரண்டாவது மாடியில் இருக்கும் செய்தி பிரிவுக்கு வந்த நான், இந்தச் சம்பவத்தை, எனது சகாக்களோடு பகிர்ந்து கொண்டேன். செய்தி ஆசிரியரின் கழுகுக் கண்களை நான் பார்க்கவில்லை. உடனடியாக அவர் பத்திரிகை தகவல் அலுவகத்தில் உதவி தகவல் அதிகாரியாக இருந்தவரும் கலைஞரால் பின்னர் இருநாவுக்கரசு என்று வர்ணிக்கப் பட்டவருடன் தொடர்பு கொண்டு சகுந்தலா தேவிக்கு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து விட்டார்.