பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

என் பார்வையில் கலைஞர்


இந்த நரித்தனத்தை மறுநாள் செய்திதாள்களில் பார்த்தோம். சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குநர் அலுவலகத்தில் குடிபோதையில் இருந்ததாகவும், சகுந்தலா தேவியுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அத்தனை பத்திரிகைகளிலும் கிட்டத் தட்ட தலைப்புச் செய்திகள் வெளியாயின. இந்த பத்திரிகைகளுக்கு செளடேக்கர் தரப்பில் என்ன நடந்தது என்பதை கேட்க வேண்டும் என்ற ஒரு நாகரீகம் கூட இல்லை . அவர் ஒரு தலித் என்பதுதான் காரணம். சகுந்தலா தேவியின் செல்வாக்கை கணக்கில் எடுத்து செளடேக்கரை களங்கப்படுத்தி செய்திகளையே வியாபாரமாக்கி விட்டார்கள்.

இதன் எதிர்வினையாக, தாசில்தாராக இருந்து பின்னர் படிப்படியாக முன்னேறிய செளடேக்கரை பற்றிய சுயவரலாற்றுக் குறிப்பை முதலில் தாமரையில் வெளியிட்டேன். இவர் ஒழுக்கம் என்று வருகின்ற போது அப்பழுக்கற்றவர். குடி என்றால் என்ன என்றே தெரியாதவர். சிறந்த கவிஞர். போராளி. என்றாலும் தமிழகத்தின் பத்திரிகைத்தனம் புரியாமல் ஆடிப் போனார். ஆனாலும், நான் அவரை ஆற்றுப்படுத்தினேன்.

எந்த குங்குமத்தை வைத்து கலைஞரை குங்குமத் தமிழன் என்று முன்பு வர்ணித்தேனோ, அதே குங்குமத்தில் செளடேக்கரின் சுருக்கமான சுயவரலாறு வெளியாகும் படி செய்தேன். சகுந்தலா தேவி அவரை இழிவு படுத்திய விவரமும் குங்குமத்தில் இடம் பெற்றது. தமிழகமெங்கும் உள்ள தலித் மக்கள் கொதித்துப் போனார்கள். அணி அணியாக லாரியில் வந்து செளடேக்கருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அன்று முதல் செளடேக்கர் ஒரு வி.வி.ஐ.பி. ஆகிவிட்டார். குங்குமம் இவருக்கு உடலானது. கலைஞர் உயிரானார். நன்றிப் பெருக்கில் கலைஞர் என்ற பட்டத்தை சொல்ல முடியாமல் அவர் மழலையாக மாறும் போது எங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செளடேக்கரின் மூத்த மகளின் திருமணம் சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டது. அழைப்பிதழும் தயாராகி விட்டது. செளடேக்கர் கலைஞரை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுக்க வேண்டும் என்றார். நானும் அழைப்பிதழ் கொடுக்க ஒரு நிமிடம் தானே என்று அவரை அழைத்துக் கொண்டு கலைஞரின் வீட்டிற்குச் சென்றேன்.