பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

63


கலைஞர் மாடியில் எழுதிக் கொண்டிருப்பதாக உதவியாளர்கள் சொன்னார்கள். ஒரே ஒரு நிமிடம் என்று மன்றாடினோம். உடனே மாடிக்குப் போன ஒருவர், மீண்டும் திரும்பி வந்து ‘கலைஞர் எழுதும்போது யாரும் போகக் கூடாதுங்க’ என்றார். கலைஞர் எங்களை அனுமதிக்கவில்லை என்று அனுமானித்துக் கொண்டோம். ஒருவேளை, அந்த உதவியாளரே கலைஞரின் எழுத்து ‘மூடைப்’ பார்த்து விட்டு அவரிடம் விவரம் சொல்லாமல் வந்திருக்கலாம் என்ற சிந்தனை எங்களுக்கு ஏற்படவில்லை. முன்னனுமதி பெறாமல் சென்றதும் எங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை.

எனக்கோ , கட்டுக்கடங்காத கோபம். கலைஞருக்கு ஆதரவாக செளடேக்கர் மூலமும் அப்போது பொறுப்பு ஆசிரியராக இருந்த என் மூலமும் ஏராளமான நிகழ்ச்சிகளை, செய்திகளை ஒளிபரப்பி வந்தோம். கலைஞரும் எங்களிடம் ஈடுபாடு கொண்டிருப்பார் என்பதைவிட கொண்டிருக்க வேண்டும் என்றே நினைத்தோம். எனக்கோ, ஒரு சக்தி வாய்ந்த நிலையத்தை, கலைஞருக்கு சரியாக பயன்படுத்தத் தெரியவில்லையே என்ற கோபம். ஒரு நிமிட சந்திப்பில் என்ன ஆகிவிடும் என்கிற வேகம். அவரது வீட்டிலேயே அவருக்கு எதிராக கத்தினேன். ஒரு சாதாரண வீட்டில் இப்படி கத்தினாலே விளைவுகள் விபரீதமாக இருக்கும். ஆனால், கலைஞரின் உதவியாளர்களோ, முகத்தில் கோபக்குறியை காட்டாமல் நயம்பட பேசி எங்களை அனுப்பி வைத்தார்கள். இந்த நயத்தகு நாகரீகம், கலைஞர் கொடுத்த பயிற்சியால் ஏற்பட்டிருக்கலாம்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு திரும்பியதும் என் கூச்சலை நானே கேட்டு எனக்கு உள்ளூர உதறல். ஆயிரம் இருந்தாலும், நானும், செளடேக்கரும் அரசு ஊழியர்கள். அதிகார வர்க்க ஏணியில் நடுப்படிக்கட்டுகள். கலைஞரோ, இந்த ஏணியே எட்ட முடியாத உயரத்தில் இருப்பவர். எனது நடத்தையைப் பற்றி ஒரு வரி முரசொலியில் எழுதினால் போதும். நான் சஸ்பெண்ட் ஆவேன். எலியோடு தவளை கூட்டு சேர்ந்த கதைபோல் செளடேக்கரும் ஒரு வழியாகி இருப்பார். இப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என்று மேலதிகாரிகளும் இருநாவுக்கரசிடம் வாங்கித் தின்ற ஒருசில செய்தியாளர்களும் காத்துக் கிடந்தார்கள். ஒரு வாரம் வரை முரசொலியை ஆழமாக படித்தேன். சின்னச் செய்திகளைக் கூட தேடித்தேடி படித்தேன். கலைஞர் கூட அப்படி படித்திருக்க மாட்டார்.