பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

69


சா.கணேசன் அவர்கள் இடத்தில் நான் மட்டும் இருந்திருந்தால், அடிதடியில் இறங்கி இருப்பேன். ஆனால், இவரது முகத்தில் ஒரு சின்னக்கோபம் கூட ஏற்படவில்லை. தப்பான ஆளை அனுப்பி விட்டோமே என்று நிச்சயம் மனதுக்குள் புழுங்கியிருப்பார். இப்போது கூட சாகணேசன் அவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்துவேன்.

கலைஞரோடு இப்படி நான் நடந்து கொண்ட போது எனக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும். சிந்திக்க தெரிந்த வயதுதான். ஒரு மகத்தான் தலைவரிடம், முன்னாள் முதல்வரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய வயதுதான். அதுவும் லட்சோப லட்ச தொண்டர்களை கொண்டவர் கலைஞர். காகிதத் தலைவர் அல்ல. அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் போய் தனியாக பேச வேண்டும் அதற்கு ஏதுவாக அவர், என்னோடு எதாவது ஒரு அறைக்கு வரவேண்டும் அல்லது கட்சியின் பொதுச் செயலாளரும், பொருளாளரும் எனக்காக அந்த அறையில் இருந்து வெளியேற வேண்டும் என்று எதிர்பார்த்து சென்றது பித்துக் குளித்தனமல்ல அசல் பைத்தியக்காரத்தனம்.

அந்தக் காலக்கட்டத்தில், இலங்கை தமிழர் போரட்டத்தின் மீது, குறிப்பாக விடுதலைப் புலிகளின் மீது நான் வைத்திருந்த கண்மூடித்தனமான ஈடுபாடே என்னை அப்படி நடக்க வைத்து விட்டது. இடம், பொருள், ஏவல் அற்றுப் போய், ஒரு கொள்கை வெறியனாக மாற்றிவிட்டது. கொள்கை வெறி உள்ளவர்களுக்கு இந்த மூன்றும் அற்றுப் போய் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போய்விடும் என்பதற்கு இலங்கையில், நமது விடுதலைப் புலிகளே சாட்சிகளாக இருக்கிறார்கள்.

பொதுவாக, கலைஞரை கோபக்காரர் என்பார்கள். ஒருவர் சொந்த இருப்பிடத்திலேயே இருக்கும் போது இடைச் செறுகலாக சம்பந்தமில்லாத இன்னொருவர் வந்து அதிகப் பிரசங்கிதனமாய் நடந்து கொள்வது, என் வீட்டில் நடந்தாலும் நான் முதலில் சொல்லக் கூடிய வார்த்தை ‘வெளியே போடா’ என்பதுதான். ஆனால், கலைஞரின் முகத்தில் ஒருதுளி கோபம் கூட இல்லை. அவர் பதிலில் ஒரு சின்ன சூடு கூட இல்லை. வார்த்தைகளால் சூடு போடுவதில் வல்லவரான கலைஞர், என்னிடம் ஏன் அப்படி மென்மையாக நடந்து கொண்டார்