பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

71


சாணக்கிய
காங்கிரசுக்கு
சறுக்கிய அடி


கர்நாடக மாநிலத்தில் இருந்து 1987ஆம் ஆண்டில், மார்ச் மாதம் பெங்களுரில் இருந்து சென்னை வானொலி நிலையத்தின் செய்தி ஆசிரியராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றேன்.

அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தார். முதல்வருக்கும், எதிர்கட்சித் தலைவரான கலைஞருக்கும் சம அளவிலான செய்திகளை வெளியிட்டேன். அப்போது வாரெனலி செய்தி என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. சென்னை தொலைக்காட்சி தவிர, வேறு எந்த தொலைக்காட்சியும் இல்லாத நேரம். சாதாரண மக்களை சென்றடையும் வானொலியின் மீது அனைத்து அரசியல் வாதிகளுக்குமே ஒரு கண். அதிலும் எங்கள் செய்திகள், பெரும்பாலானவர்கள் கண்விழிக்கும் காலை ஆறு நாற்பது மணிக்கும், மத்தியானம் இரண்டு பத்துக்கும், மாலை ஆறு முப்பதுக்கும் ஒளிப்பரப்பாகும். சட்ட பேரவை நிகழ்ச்சிகளையும் நேரில் சென்று நடந்தவற்றை பார்த்து, அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கிய பகுதிகளை விட்டு விட்டு, அந்த சபை ஏதோ நாகரிகமான சபை என்பது போல் மக்களுக்கு ஒரு பொதுக் கருத்தை கொடுத்து செய்திகள் வெளியாகும்.

சட்டப் பேரவையில், அதன் பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன் அவர்கள், பலதடவை கலைஞரை மிகவும் கேவலமாக விமர்சித்திருக்கிறார். அடிதடிக்கும் தயார் என்பது போல் திமுக உறுப்பினர்களுக்கு சவால் விடுவார். ஒருதடவை அவர் கலைஞரை சுட்டிக் காட்டிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சிலேயே குத்திக் கொண்டிருக்கின்றன. நேரில் பழகுவதற்கு இனிமையானவர்தான். ஆனால், சட்டப் பேரவையில் தனது புரட்சி தலைவரைப் பார்த்து விட்டால் போதும். எதிராளிகள் அவருக்கு வெறும் தூசு.