பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

என் பார்வையில் கலைஞர்


1987ஆம் ஆண்டு வாக்கில், இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமே கொதித்து வேலை நிறுத்தங்களும், ஊர்வலங்களும் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. தமிழகம் ஓரே மனிதன் போல் நிமிர்ந்து இலங்கை தமிழ் தோழனுக்காக போர்க்குரல் கொடுத்தது. நானும் விடுதலைப்புலிகளுக்கு ஏகப்பட்டச் செய்திகளைக் கொடுத்தேன். வீரத்தளபதி கிட்டு சுடப்பட்டார் என்று ஒரு தனிப்பட்ட விவகாரத்தை தலைப்புச் செய்தியாக்கி இலங்கை அரசின் கோபத்துக்கு உள்ளாகி மத்திய அரசின் கண்வலைக்குள்ளும் சிக்கி விட்டேன். இந்தச் சமயத்தில் இந்திய விமானங்கள் இலங்கையின் ஆகாய எல்லையை மீறி, வட இலங்கை தமிழர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கின இந்தச் செய்தியை ‘விமானங்களைப் பார்த்து, அவை ராணுவ விமானங்கள் என்று பயந்து போய் பதுங்கிய தமிழ் மக்கள், பின்னர் இது குண்டு விமானங்கள் அல்ல... தொண்டு விமானங்கள் என்று வீதிக்கு வெளியே வந்து ஆரவாரம் செய்தார்கள்’ என்று செய்தி போட்டேன். இந்த செய்தியை கேட்ட மறுவினாடியே திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தொலைபேசி மூலமாக என்னைப் பாராட்டினார்.

முதல்வர் எம்.ஜி.ஆரை தமிழ்ச் சமூகத்தைக் கருதி நான் விரும்பவில்லை என்றாலும், அவர் நோய் வாய்ப்பட்ட போதும் பேசமுடியாமல் திணறிய போதும் என் கண்கள் நீருக்குள் மூழ்கின. அவர் இறந்து செய்தியை மிகச் சிறப்பாக வெளியிட்டோம். அதே சமயம் அவரது இழவெடுத்த தொண்டர்கள் என கருதப்படுபவர்கள் அண்ணாசாலை கடைகளை சூறையாடியதை அடக்கி வாசித்தோம். இதே போல் அங்கிருந்த கலைஞர் சிலையை உடைத்ததையும் சட்ட ஒழுங்கைக் கருதி இலைவு மறைவு காய் மறைவாகதான் வெளியிட்டோம்.

ஜானகி அம்மையார் பதினைந்து நாள் முதல்வராக பதவி வகித்து பிறகு காணாமற் போனதும் வரலாறு. சட்டப் பேரவையில் அடிதடியே நடைபெற்றது. இதைப் பற்றி எனது செய்தியில் சட்டசபை ரத்த சபையாகி விட்டது சொற்போருக்கு பதிலாக மற்போர் நடந்தது என்று குறிப்பிட்டதை இப்போது கூட செய்தியாளர்கள் பாராட்டுவார்கள்.

ஜானகி அம்மாள் ராஜீவ் காந்தி அவர்களோடு இந்தியில் பேசி காங்கிரஸ் ஆதரவை பெற்று விட்டார் என்று ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் என்னிடம் குறிப்பிட்டார். ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்த போது என் மானசீகமான