பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

75


‘மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்களிடம் இருந்த காக்காக் கூட்டம், இப்போது உங்களை மொய்க்கும். நீங்கள் இவர்களை என்ன செய்ய போகிறீர்கள்?’

‘காகங்கள் துப்புரவு பணிக்குத் தேவை. ஆனாலும் அவை கழுகுகள் ஆகாமல் பார்த்துக் கொள்ளப்படும்’

இந்தப் பதிலில் எத்தனையோ அர்த்தங்கள் உள்ளடங்கி உள்ளன. ஒவ்வொரு செய்தியாளரும் தத்தம் பத்திரிகைகளின் நிலைபாடுகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள முடியும். மக்களாட்சி முறைமையில் தொண்டர்களை கவனித்துக் கொள்ள வேண்டியதோடு, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தும் உதிரிகளையும், உதிரி கட்சித் தலைவர்களையும் கவனித்தாக வேண்டும். இது தவிர்க்க முடியாதது.

கலைஞரின் செய்தியாளர் சந்திப்புகள் மிகவும் இனிமையானவை. பொதுவாக பிற தலைவர்களை நோண்டும் செய்தியாளர்கள், கலைஞரிடம் அடக்கமாகவே கேள்வி கேட்பார்கள். கணிப்பொறி போல் அரைக் கணத்தில் உலகமெல்லாம் இயங்கும் இண்டர்நெட் போல் அவர் உடனடியாக பதிலளிப்பார். கேள்வியை பதிலாக திருப்பிக் கொடுப்பார். கேட்டவரும் அவரோடு சேர்ந்து சிரிப்பார்.

பொதுவாக தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புகளில் நொறுக்குத் தீனி கிடைக்கும். தொழிலதிபர்கள், செய்தியாளர்களை சந்திக்கிறார்கள் என்றால், என்னவெல்லாமோ கிடைக்கும். ஆனால், கலைஞரின் செய்தியாளர் கூட்டங்களில் இப்போது எப்படியோ அப்போது குடிக்கத் தண்ணீர் மட்டுமே கிடைக்கும். ஒருதடவை முதல்வர் கலைஞரின் பேட்டி ஒன்றரை மணியைத் தாண்டிவிட்டது. வயிற்றுப்பசி அகோரமாக இருந்தது. உடனே நான் ‘சார் முதல்ல வயிற்றுக்கு உணவிட்டு விட்டு அப்புறம் செவிக்கு உணவிடுங்கள்’ என்று உரிமையுடன் கேட்டேன். அவர் வழக்கம் போல் நையாண்டியாக பதிலளிக்கவில்லை. சிரித்தார். அன்றுமுதல் அவரது செய்தியாளர் கூட்டத்தில் தேநீர், பிஸ்கட் வகையறாக்கள் கிடைத்தன.

ஒரு தடவை, ஊட்டியில் இப்போது காணாமல் போன பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் திரைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னொரு தொழிற்பிரிவை இயக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வானொலிச் செய்தியாளராக சென்றிருந்தேன்.