பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

என் பார்வையில் கலைஞர்


நான் வேண்டாங்கல’ என்று சொல்லிவிட்டேன். உடனே, எங்கள் அமைச்சகத்தில் சர்வ வல்லமை மிக்க இணைச் செயலாளர் தாமுவுக்கு, என் மீது கடுமையான கோபம். இவரை அண்டி பிழைக்கும் நிலைய இயக்குநருக்கும் அதைவிடக் கோபம். ஆனாலும், செய்தித் துறையில் இருந்த அத்தனை பேரும் என் பக்கம். குறிப்பாக பீர் முகமது என்ற தயாரிப்பாளர் கலைஞரின் பக்தர். ஆனாலும், நிலைய இயக்குநர் ஒட்டு மொத்தமான பொறுப்பாளர் என்ற தொலைக்காட்சி இலக்கணப்படி எனக்கு தீராத தலைவலி ஆனார்.

அலுவலகத்தில் இப்படி என்றால், செய்திப் பணியிலும் பன்மடங்கு தொல்லை. அப்போது, வி.பி.சிங் தலைமை அமைச்சராக இருந்த நேரம். உதிரிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் எலியும், தவளையுமாக கூட்டணி அமைத்து, அரசு நடத்திய காலம். அப்போது வேறு தொலைக்காட்சிகளும் கிடையாது. இல்லாதவன் பெண்டாட்டி எல்லாருக்கும் அண்ணி என்பது மாதிரி அத்தனைக் குட்டித் தலைவர்களும் எனது செய்திப்பிரிவில் உரிமை கொண்டாடத் துவங்கினார்கள். மாநில ஜனதாதள தலைவராக இருந்த சிவாஜி கணேசனுக்கு கலைஞருக்கு இணையாக செய்திகள் போட வேண்டும் என்பது தளபதி சண்முகம், ராஜசேகரன் போன்றோரின் மிரட்டல் நடிகர் திலகம் மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் போது, அவர் சென்னையில் இருந்து அறிக்கை வெளியிடுவதாக எனக்கு ஜனதா தளத்திலிருந்து செய்தி அறிக்கைகள் வரும். இது அயோக்கியத்தனம் என்பதால் நான் அவற்றை ஒலிபரப்ப மறுத்துவிட்டேன். இதனால், தளபதி சண்முகம் கொலை மிரட்டல் போன்ற கடிதம் ஒன்றை கூட என் பெயரில் எனக்கு அனுப்பி வைத்தார்.

திராவிடக் கழக தலைவர் வீரமணி அவர்கள் ‘எங்கள் ஆட்கள் பொல்லாதவங்க சமுத்திரம்’ என்று தனது பொல்லாத்தனத்தை தொண்டர்கள் மீது காட்டினார். பாரதிய ஜனதா கட்சி, குறிப்பாக அதன் குரு கட்சியான ஆர்.எஸ்.எஸ் தங்கள் கட்சியும் கூட்டணியை ஆதரிப்பதால் தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது - ஜானா கிருஷ்ணமூர்த்தி தலையிடுவதே இல்லை. ஆனாலும், சில்லறை தேவதைகள், இரவில் வீட்டுக்கு தொலைபேசியில் பேசி கண்டபடி திட்டுவார்கள்.