பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

என் பார்வையில் கலைஞர்


இதையடுத்து, கலைஞரின் பிறந்தநாள் வந்தது. எங்கள் அமைச்சர் உபேந்திராவையும் விட்டுவிட்டு, கலைவாணர் அரங்கத்திற்கு காமிரா சகிதமாக ஓடினேன். அப்போது காவற்துறையின் துணை கமிசனரும், இப்போதைய கூடுதல் கமிசனருமான பாலசந்திரன் அவர்கள், எனக்கு மேடைக்கு வழிவிட மறுத்தார். எனக்கு என் தொழில் முக்கியம். அவருக்கு அவர் தொழில் முக்கியம். கூடவே, தொலைக்காட்சி என்ற கொம்பு எனக்கு முளைத்திருந்தது. பயங்கரமான வாக்குவாதம். யாரோ தலையிட்டு, அவரே சாந்தமாகி என்னை உள்ளே அதாவது மேடைக்கு அனுப்பிவைத்தார். இதை எதற்காக சொல்லுகிறேன் என்பது வாசகர்களுக்கு பின்னால் தெரியும். இந்த ஐபிஎஸ் அதிகாரியான பாலசந்திரன், அந்த ஒரு தடவை தவிர வேறு எந்தத் தடவையும் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.

இப்படி பத்திரிகையாளருக்கும் காவற்துறையினருக்கும் அடிக்கடி மோதல்கள் வருவதுண்டு. ஆனாலும், இவை வெறும் ஊடல்கள்தான். அன்றைய செய்தியில், கலைஞருக்கு எத்தனை அடைமொழிகள் உண்டோ அத்தனையும் போட்டு, அவரது பிறந்தநாள் விழாவை பெருமைப்படுத்தினேன். அவர் பார்த்தாரோ கேள்விப்பட்டாரோ. எனக்குத் தெரியாது. அவரைச் சந்திக்கும் போது இதைப் பற்றி சொல்வதற்கு எனக்குக் கூச்சம்.

இந்தச் சமயத்தில், விடுதலைப்புலிகளைப் பற்றி ஏஜென்ஸி செய்திகளில் வருபவற்றை தக்கப்படி எடிட் செய்து, செய்திகளில் சேர்ப்போம். இந்திய அமைதிப்படையோடு ஆரம்பத்தில் நான் யாழ்பாணம் சென்றபோது அங்குள்ள மக்கள் அந்தப் படைக்கு கையாட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். இந்தப் படையை விடுதலைப்புலிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே என் கருத்து. ஆகையால் நான் விடுதலை புலிகளின் ஆதரவாளனாக இருந்த காலம் போய்விட்டது. விருப்பு வெறுப்பற்ற செய்தியாளனாகவே, இவர்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் செய்திகளைப் போட்டோம். இது அப்போது தனிக்குடித்தனத்திற்கு துடித்துக் கொண்டிருந்த வைகோவிற்கு அவலாகி விட்டது. எங்களது செய்திப் பிரிவைப் பற்றி அமைச்சர் உபேந்திராவுக்கு கடுமையாக பல்வேறு கண்டனக கடிதங்களை எழுதினார். அவை அனைத்தும் என்னுடைய கருத்து கேட்டு வந்தன. தனிப்பட்ட முறையில் அவர் என்னைத் தாக்கவில்லை. ஒருவேளை உபேந்திராவிடம் நேரில் சொல்லியிருக்கலாம்.