பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

89



அங்கே நிற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் - அதாவது என்னை ஒரு அரசுச் செய்தியாளனாகக் கருதாமல், எழுத்தாளத் தனி மனிதனாகக் கருதி அந்த இடத்தில் இருந்து அவர் கார் புறப்படும் முன்பே வெளியேறி விட்டேன். கலைஞருக்கு ஐந்து நிமிட இடைவெளியில் கூட அவர் அறிக்கைகளை செய்தியாக்குகிற என் மீது அவர் அப்படிக் கோபப்பட்டது அப்போது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை. ஒரு வேளை வைகோவிற்காக, கட்சித் தலைவர் என்ற முறையில் என் மீது கோபப்பட்டதாக பாவனை செய்து இருக்கலாம். நானும், அன்றிரவுச் செய்திக்குப் பொறுப்பல்ல என்று விளக்கி இருக்கலாம். அல்லது தனியாகச் சந்தித்துப் பேசுகிறேன் என்று அப்போதைக்குச் சொல்லி விட்டு, பின்பு நான்கு நாள் கழித்து அவரை நேரில் சந்தித்து, வை.கோ. அணியினரால், திமுகவிற்குக் கெட்ட பேர் வருவதை நம்பகமாகச் சொல்லியிருக்கலாம். நானும் அவசரப்பட்டு விட்டேன். வேண்டுமென்றே என்னைப் போட்டுக் கொடுத்த உபேந்திரா போல், ஒரு பியூன் கூட நடந்து கொள்ள மாட்டார்.

நான் மறுநாள் அலுவலகம் திரும்பியதும், மேற்கொண்டும் தொலைக்காட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், வை.கோ. போன்றவர்களின் விடுதலைப் புலி வேகத்தை, என்னால் செய்தியாக்க முடியாது என்றும் எழுத்து மூலம் அமைச்சர் உபேந்திராவுக்குத் தெரிவித்து விட்டேன். பொதுவாக ஒரு அதிகாரி, இந்த மாதிரியான கருத்துகளை, தனது உடனடி அதிகாரி மூலம் அமைச்சரவைச் செயலாளருக்குத்தான் அனுப்ப வேண்டும். ஆனால், விவகாரம் அரசியல் கலந்ததாக இருந்ததால், அதில் செய்தி ஆசிரியர் என்பவர் விருப்பத்திற்கு விரோதமாகவே ஈடுபடுத்தப்படுவதால், ஆபத்துக்குப் பாவமில்லை என்று கருதி, அமைச்சருக்கே நேரிடையாக எழுதி விட்டேன்.

துவக்கக் கட்டமாக, என்னைப் புது டில்லியில் பயிற்சி என்ற பெயரில் பார்சல் செய்தார்கள். அங்கே போன ஒரு மாத காலத்திற்குள், சென்னை வானொலி நிலையத்திற்கு என்னை மாற்றி, ஆணை பிறப்பித்தார்கள். வீடு, அலுவலகம், பயிற்சி நிலையம் என்று ஒரே மாதிரியான மூன்று ஆணைகள் எனக்கு வந்தன. சென்னைக்குத் திரும்பியதும், யானை போல், வஞ்சம் வைத்திருந்த நிலைய இயக்குநர், தாமுவிடம் பேசி எனக்கு ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்காமல், பணியிலிருந்து விடுவித்து விட்டார்.