பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

91


கலைஞருக்கு எதிராக
ஒரு
செய்தி இயக்கம்

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை வானொலி நிலையத்தில், மூத்த செய்தியாளராகப் பொறுப்பேற்றேன். அப்போது செய்தி ஆசிரியர் நீண்ட கால மருத்துவ விடுப்பில் இருந்ததால் அவரது பணியையும் கவனித்துக் கொண்ட எனக்கு, கலைஞருக்கு எதிராக ஒரு செய்தி இயக்கத்தையே செயல்படுத்த முடிந்தது.

கலைஞர்தான் என்னை மாற்றி விட்டார் என்று திட்ட வட்டமாக நம்பினேன். பத்து நிமிடத்திற்குள் அவரது செய்தியைத் தொலைபேசி மூலமே உள்வாங்கிக் கொண்டு வெளியிட்ட என்னை, தமிழனைத் தமிழன்தான் ஆள வேண்டும். இந்த வகையில் கலைஞரே முதல் தமிழன் என்று மனப்பூர்வமாக நினைத்து, இதனைத் தொலைக்காட்சியில் சொல்லாலும், செயலாலும் கடைப்பிடித்த என்னை, கலைஞர் கடைத் தேங்காய் ஆக்கி விட்டாரே என்ற கோபம்.

நான் பொறுப்பேற்ற இரண்டு மாத காலத்திற்குள், டிசம்பர் மாத மத்தியில் நான் எழுதிய வேரில் பழுத்த பலா என்ற இரண்டு குறுநாவல்களை உள்ளடக்கிய படைப்பிற்கு, சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது. இதனால் பல பத்திரிகைகள் என்னைப் பேட்டி கண்டன.

சென்னை தொலைக்காட்சியில், திமுக அரசு எனக்குத் தொல்லை கொடுத்ததாக, அத்தனை பத்திரிகைகளிலும் தெரிவித்தேன். இதர கட்சிகளும் ஆளுக்கு ஆள் நாட்டாண்மை செய்ததாகவும் குறிப்பிட்டேன். தினமலரைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் இந்தப் பகுதியைப் போடவில்லை. ஆனால், தினமலர் இந்தப் பகுதியை மட்டும் பெரிய செய்தியாகப் போட்டது.