பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

95



செய்தியாளர் சந்திப்பு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதிமுகவின் ஊழல் பட்டியல் அறிக்கை செய்தியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு, கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். தாமதமாகப் போன நான், பேசிக் கொண்டிருந்த கலைஞரை இடை மறித்து, இப்படிக் கேட்டேன்.

‘சார் நீங்க என்னைக் கூப்பிடல. ஆனாலும் வந்துட்டேன்’

‘நீங்க எங்க செய்தியப் போடமாட்டீங்க... ஆனாலும் வரவேற்கிறேன்’.

செய்தியாளர்கள் சிரித்து விட்டார்கள். 'கலைஞரிடம் ஏன் வாயக் கொடுக்கறிங்க' என்று சிலர் என்னைச் செல்லமாகத் தட்டினார்கள். கலைஞர் முகத்தையே பார்த்தேன். காலையில்தான், அவரைப் பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகளை, நேரில் கண்டது போல் செய்தியாக்கி இருந்தேன். ஆனால், அவர் முகத்தில் எந்தக் கடுகடுப்பும் இல்லை. என்னைப் புன்முறுவலோடு பார்த்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு துளி கோபத்தைக் கூட அவர் கண்களோ, முகபாவமோ காட்டவில்லை. இன்று வரை இது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

செய்தியாளர் கூட்டம் முடிந்ததும், அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னைப் பார்த்து 'எங்க செய்தியையும் ரேடியோவில் போடுவீங்களா அண்ணே?' என்றார். இந்த அண்ணே என்ற வார்த்தை என்னைக் கசக்கிப் பிழிந்தது. இவர் முகத்திலும் ஒரு சின்ன எள் கூட வெடிக்கவில்லை. மாறாக, என்னை நட்பாகவே பார்த்தார். அதிமுகவுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலையும், மாலைச் செய்தியில் தலைப்புச் செய்தியாகப் போட்டு, விளாசித் தள்ளி விட்டேன்.

இந்த அணுகுமுறை, என்னை ஓரளவு மென்மைப்படுத்தியது. ஆனாலும் அரசுக்கு எதிரான செய்திகள் வழக்கம் போல் ஒலிபரப்பாகிக் கொண்டுதான் இருந்தன.

இந்தக் கால கட்டத்தில் இலங்கைக்குச் சென்ற, இந்திய அமைதிப்படையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், ராஜீவ் காந்திக்கு ஏற்பட்டது. கலைஞர் இந்தப் படை சென்னை திரும்பிய போது, அதை வரவேற்கச் செல்லவில்லை.