பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

என் பார்வையில் கலைஞர்



பேசிய முறையில் இருந்து, இரண்டாமவர், முதலாமவரின் ஆளுமைக்கு உட்பட்டு விட்டார் என்பது புரிந்து விட்டது. இந்த அமைச்சர், பிரதமர் சந்திர சேகருக்கு மிகவும் வேண்டியவர்.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, சின்ஹா, மறுநாள் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நான் சும்மா இருக்க வேண்டும் என்ற உறுதியோடுதான் போயிருந்தேன். ஆனால், சில செய்தியாளர்கள் கலைஞர் ஆட்சிக்கு எதிராகச் சில கேள்விகளைக் கேட்ட போது, நானும் சேர்ந்து கொண்டேன். 'மத்திய அரசு கலைஞர் ஆட்சி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது' என்றும் கேட்டேன். அப்போது அமைச்சருடன் இருந்த மத்திய அரசின் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அமைச்சரின் காதைக் கடித்தார். நான் இன்னார் என்று சொல்லி விட்டார். உடனே அமைச்சரும் கோபத்தோடு, 'எதுவும் பேசாமல், சும்மா இருங்க சார்' என்று ஆங்கிலத்தில் கடுமையாகச் சொன்னார். அப்போது கலைஞரின் நாற்காலியை விட என் நாற்காலிதான் ஆடிப் போனது.

மாலையில், இதே ஐ.ஏ.எஸ் அதிகாரி சென்னையில் உள்ள தகவல் ஒளி பரப்புத் துறை உயரதிகாரிகளின் கூட்டத்தை, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் கூட்டினார். இதில் அமைச்சகத்தின் செயலாளரான மகேஷ் பிரசாத்தும், கலந்து கொண்டார். எங்கள் அமைச்சகத்தின் தலைமை அதிகாரி இவர்தான். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அப்போது துணை இயக்குநராக இருந்த எழுத்தாளர் ஏ. நடராசனும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்.

இந்த இ.ஆ.ப, ‘தமிழக அரசை, குறிப்பாக முதலமைச்சரை, இங்குள்ள ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்களாம். இதன் மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன். இனி மேலும், இப்படி முதலமைச்சருக்குத் தர்ம சங்கடமான நிலைமையைத் தோற்றுவித்தால், அவர்கள் மீது நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்’ என்று ஓங்கிக் கத்தினார். கூட்டத்தில் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. ஒரு வேளை, எப்போதாவது தப்பித் தவறி கலைஞரைக் குறை கூறி இருப்போமோ என்பது மாதிரி, தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.

என்னால் பொறுக்க முடியவில்லை. நான் எழுந்தேன். ‘நீங்கள் சொல்வது என்னைத்தான்... நான் தமிழக அரசை விமர்சிப்பது, கலைஞரை விமர்சிப்பது ஆகாது... முதல்வருக்கும், விடுதலைப் புலிகளின் மீது அப்படி ஒன்றும் பாசம் கிடையாது.