பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறிமுகவுரை

“பாவேந்தர் பாரதிதாசனாருக்குப் பின் பாட்டுலகில் தலை நிமிர்ந்து நிற்போர் முடியரசனாரும் பெருஞ்சித்திரனாருமே!”

என்பார் பாவாணர்.

பறம்புக் குடியில் 1969 இல் நடந்த உலகத் தமிழ்க் கழக முதல் மாநில மாநாட்டில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் இவ்வாறு பேசிப் பெருமிதமுற்றார்.

இசைப்பாடல், தனிப்பாடல், காப்பியம், கடிதம், கட்டுரை - என எல்லா இலக்கிய வடிவங்களையும் கையாண்டவர் பாவலர் முடியரசன்.

குமுகாயக் கோணல்களை நிமிர்த்துவதையே இலக்காக வைத்து இயங்கியது அவருடைய எழுதுகோல்.

‘எப்படி வளரும் தமிழ்?’ எனும் முடியரசனின் கட்டுரை இலக்கியம், தமிழ்மதி பதிப்பகம் வழியாகத் தமிழுலகின் கைக்கு வருகிறது.

பாவாணரின் அமிழ்தப் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர அள்ளி வழங்கி, உலகத் தமிழர்களை வியப்பிலும் மகிழ்விலும் திளைக்கச் செய்த தமிழ்மண் பதிப்பகம் உரிமையாளர் தமிழ்மொழிக் காவலர் கோ.இளவழகன் அவர்களின் இளவல் கோ.அரங்கராசன் பாவலர் முடியரசனாரின் படைப்புகளை வெளியிட முன் வந்திருப்பது பொருத்தமானது.

பாவலர் முடியரசனின் தந்தையார் கப்பராயலு திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்; தாயார் சீதாலட்சுமி பெரிய குளத்தில் பிறந்தவர்.

தாய் மாமன் துரைசாமியின் அரவணைப்பில் வளர்ந்ததால், முடியரசனுக்கும் பெரிய குளமே பிறப்பிடமாய் மாறியது!

பெற்றோரின் ஐந்தாம் மகனாக 7.10.1920 இல் பிறந்த இவரின் - திண்ணைப் பள்ளிப் படிப்பு பெரிய குளத்தில் தொடங்கியது; வேந்தன் பட்டியில் தொடர்ந்தது; மேலைச் சிவபுரியில் பள்ளிப்படிப்பாக வளர்ந்தது.

சென்னைப் பல்கலைக் கழகப் புலவர் புகுநிலைத் தேர்வை 1939 இல் எழுதி வெற்றி பெற்று, மேலைச் சிவபுரி செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் வகுப்பு மாணவரானார்.