பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகவுரை

ix


அக்கல்லூரிப் பொங்கல் விழாவிற்கு ஒருமுறை தலைமை தாங்கும் வாய்ப்பை , மாணவர் முடியரசன் பெற்றார்.

‘சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும்

பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?’

என முடியரசன் முழங்கியது அந்த விழாவில் தான்! முடியரசனின் இந்தப் பாடல்வரிகளைப் பாவேந்தர் பெயரில் சிலர் வாழவைத்துக் கொண்டுள்ளனர்.

முடியரசன் அன்று தலைமை தாங்கிப் பேசிய நெருப்புப் பேச்சில், மதங்களும் கடவுள்களும் புராண இதிகாசங்களும் கருகி விழுந்தன.

இதனால் எழுந்த மதவாதிகளின் கோபம், 1943 இல் புலவர் தேர்வில் முடியரசனைத் தோல்வியுற வைத்தது. பின்பு பொறையாறு சென்று தங்கித் தஞ்சைவந்து தனியாகத் தேர்வெழுதிப் புலவர் பட்டம் பெற்றார்; தமிழாசிரியர் ஆனார்.

பல நூறு மாணவர்களைப் பகுத்தறிவாளராகவும் தமிழுணர்வாளர்களாகவும் உருவாக்க, அவரின் தமிழாசிரியர் பணி வழியமைத்தது.

முடியரசனின் இயற்பெயர் துரைராசு. அவரின் பெயர் மாற்ற வரலாறு சுவையானது.

மேலைச் சிவபுரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, அருகே உள்ள திருப்புத்தூரில் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு! சொற்பொழி வைக் கேட்ட துரைராசு, அண்ணா எழுப்பிய தமிழுணர்வால் ‘முடியரசன்’ என்ற தம் பெயரை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தார்.

அறிஞர் அண்ணா பேசியதற்கு அடுத்தநாள் அதே மேடையில் பாவேந்தர் பாரதிதாசன் பேச்சு!

மூடத்தனமான புலவர்களையும் படிப்பாளிகளையும் சாடிய பாவேந்தர், புராண இதிகாசங்களால் நேர்ந்த இழிவை விளக்கிய போது கனல் கக்கினார்.

பாவேந்தரின் சொற்பொழிவு, முடியரசனின் மற்றொரு மனக் கதவைத் திறந்து வைத்தது.

முதல் நாள் அறிஞர் அண்ணா பேச்சால் ‘முடியரசன்’ எனப் பெயர் பெறத் தீர்மானித்தவர் - அடுத்தநாள் பாவேந்தர் பேச்சைக் கேட்டதும் ‘இனி நாடு, மொழி, இனம் பற்றியே பாட வேண்டும்’ எனவும் தீர்மானித்துக் கொண்டார்.

அன்றுமுதல், பழைய பெயரோடு பக்தியும் இவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டது; தன்மானத் தமிழுலகம் தலைசிறந்த பாவலர் ஒருவரைப் பெற்று பெருமையுற்றது.

‘எப்படி வளரும் தமிழ்?’ எனும் இந்நூல் முழுதும், பகுத்தறிவு நோக்கும் தமிழின மேம்பாடும் அடிச்சரடாய் இழையோடி நிற்பதைக் காணலாம்.

‘எப்படி வளரும் தமிழ்?’ எனும் எழுத்தோவியம் முதலாக ‘மங்கல வாழ்த்து’ ஈறாகப் பதினான்கு கட்டுரைகள் இந்நூலை அணிசெய்கின்றன.