பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X

எப்படி வளரும் தமிழ்?


தமிழ் வளர்ச்சி, தமிழ்த் தேசியம், இலக்கியத் திறன், இலக்கிய வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைப்பாக்க வரலாறு - என வகைவகையான நறுமணங்களை ஏந்திய கட்டுரை மலர்களால் உருக் கொண்டுள்ளது இந்தப் புத்தகப் பூமாலை!

பாவேந்தர் தாம் கொண்டுவந்த தலையணையையும் சமுக்காளத்தையும் மறந்து விட்டு, இடக்கையைத் தலைக்கு அணையாக வைத்தபடி சலித்துக் கொள்கிறார் ‘தலையணை கூட இல்லையே!’

அவர் கொண்டு வந்தவற்றை நினைவூட்டுகிறார் முடியரசன். ‘அடே! ஆமாப்பா நான் எடுத்திட்டு வந்தது தான்!’

தாம் கொணர்ந்த தலையணையை மறந்து விட்டு, கை வலிக்கிறதே எனச் சலித்துக் கொள்ளும் பாவேந்தரின் குழந்தையுள்ளத்தை ஒரு கட்டுரையில் படம் பிடித்துக் காட்டுகிறார் முடியரசன்.

காரைக்குடி அழகப்பா கல்லூரி பாட்டரங்கிற்குத் தலைமையேற்க பாவேந்தர் வந்த போது நடந்துள்ள நிகழ்ச்சி இது!

தம் மகன் பாரி, தொட்டிலில் குழந்தையாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார் பாவலர்.

வைத்த விழி வாங்காமல், குழந்தை உறங்கும் காட்சியில் மகிழ்ந்த முடியரசனாரின் மனம் - பாடலாய் அதனை இறக்கிவைக்கிறது.

மோனத் துயில் கொள்ளும் போதினிலே - இசை
மூடிக் கிடக்கும் கண் மீதினிலே
ஞானச் சுடரொளி வீசுதடா - தெய்வம்

நண்ணிலந் தென்நெஞ்சில் பேசுதடா!

பாடல்காட்டும் குழந்தை பாரி, பின்னாளில் பேராசிரியர் இரா. இளவரசு அவர்களின் மாணவரானார்; முனைவர் சுப. வீரபாண்டியனின் வகுப்புத் தோழரானார்; தந்தை முடியரசனின் புகழைப் பரப்பி வருவதோடு, படைப்புகளை வெளிப்படுத்தும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

1957க்கும் 1987க்கும் இடைப்பட்ட முடியரசனாரின் முப்பதாண்டு கால எழுத்தோவியங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன; பல்வேறு உணர்வுகளை நம் நெஞ்சில் பதிய வைக்கின்றன.

தம்மைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பும் இளைஞர்கள் கையில் இந்நூல் தவழ வேண்டும்.

சூலூர் - பாவேந்தர் பேரவை,
‘தாயகம்’ எசு. வி. எல். நகர்,
சூலூர், கோவை - 641 402.

செந்தலை ந. கவுதமன்,