பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

எப்படி வளரும் தமிழ்?


பாவேந்தர் பாரதிதாசன் தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புரட்சிக் கவிஞர். பாராண்ட தமிழ் இனம் பல்லாற்றானும் அயலவர் வலையுள் சிக்குண்டு, சிதறிக் கிடந்த வரலாற்றைச் சொல்லி அரசியல், கலை, பண்பாடு, நாகரிகம், இலக்கியம் முதலிய துறைகளில் தலை நிமிர வைத்த பெருமைக்குரியவர்.

இனிய சொல்லும், சொல்லின் பொருளும், தனிச்சொல் நடையும், சொற்சிக்கணமும்,உணர்ச்சி நடையும், இரட்டுற மொழிதலும் கவிதைக்கு இன்பம் தரும் சொல்லழகுகளாகும் என்பதைத் தம் பாடல்களின் உட்பொருளால் உணர்த்தியவர். பாரதிதாசன் தமிழினத்தின் விடுதலைக்கு தன்னை ஒப்படைத்தவர். இவரது வாழ்க்கை போர்க்கள வரலாறாகும். புதிய குமுகாயத்தை உருவாக்க, கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்க்கப் பாடுபட்டவர். தொண்டுக்கு இலக்கணமானவர். தமிழன் உரிமையை உரத்துக் கூறியவர்.

பல மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்ட ஆணினம் மகளிரின் முன்னேற்றத்தைப் பொருத்தளவில் மாற்றங்களை ஏற்கத் தயங்குவதும், எதிர்ப்பதும் ஏன்?

‘கோரிக்கையற்று.........................

........................... வேரிற் பழுத்தபலா’

எனும் பாவேந்தரின் வரிகளைப் படித்து முடிக்கும்போது துன்பம் மேலிடுகிறது.

“நவில் தொறும்....................” (குறள் 783)

“இருந்தமிழே” எனும் தமிழ்விடுதூது நூல் வரிகளும் “தெள்ளுற்ற தமிழமுதின்” எனும் பாரதியார் வரிகளும், “தமிழுக்கும் அமுதென்று பேர்” எனும் பாவேந்தர் வரிகளும் தமிழின் இன்பந்தரும் செய்திகளாகும்.

தமிழர் நாகரிகம் உலகில் மூத்தது. தொன்மைச் சிறப்புடையது. நாகரிகத்தின் உச்சியில் இருந்தது. பண்டை நாளில் பெருகிக் கிடந்த அரசியல் நாகரிகத்தையும், மன்பதை நாகரிகத்தையும், குடும்ப நாகரிகத்தையும் வரலாற்றாய்வாளர்கள் தமிழர் நாகரிகம் உலக நாகரிகத்தின் தொட்டில் என்று உரைப்பர்.

தம் நிலையினின்று தாழாதவர்கள், உரிமைப் போக்கும், தன்மான உணர்வும் கொண்டவர்கள், அடிமை மனப்பான்மை அற்றவர்கள், தவறு காணின் மன்னனேயாயினும் இடித்துச் சொல்லும் உளப்பாடு உடையவர்கள் பண்டைப்புலவர்கள் என்பதைச் சொல்லி அன்றைய நிலையினை படம் பிடித்துக் காட்டி உள்ளார்.

சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்துப் பாடல் பெண்மைக்குச் சிறப்புச் செய்வதை விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார் பாவலர். தமிழர்கள் படித்துப் பயன் பெறுக.

- தமிழ்மதி பதிப்பகத்தார்