பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்படி வளரும் தமிழ்?

3


ஆண்டு வருகிறோம். உருசிய மொழியில் Nedochoty, Nedostatki, Probely என்னும் சொற்கள் இருக்கையில் அயன்மொழிச் சொல்லை நாம் நம்முடைய மொழியில் ஏன் எடுத்தாளுதல் வேண்டும்? அண்மையில் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்ட ஒருவர், அயன்மொழிச் சொற்களை ஆளத் தொடங்குவாராயின் அவரை மன்னித்துவிடலாம். ஆனால், அவ்வாறே செய்கிற ஓர் எழுத்தாளரை மன்னிக்கவே முடியாது. தேவையின்றி அயன்மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதன் மீது ஒரு போரையே தொடுக்க வேண்டிய நேரம் இதுவன்றோ?” இவ்வாறு கூறியவர் யார்? உலகமே ஒன்றாக வேண்டும் என்று கைதூக்கிய, விரிந்த, பரந்த, அகன்ற மனப்பான்மை படைத்த, புத்துலகச் சிற்பி வி.ஐ.இலெனின்தான். இவரைக் குறுகிய மனப்பான்மையுடையவர் என்று எந்த அறிவாளியாவது கூற முற்படுவாரா? நம்மைக் குறை கூறும் விரிந்த மனப்பான்மை படைத்த நிறைமதியாளர் இதற்கு என்ன மறுமொழி கூறுவர்?

உலகமே இவ்வாறுதான் இயங்குகிறது; தாய்மொழியை மதித்துப் போற்றி வளர்த்து வீறுநடை போடுகிறது. ஆனால், தமிழ்நாட்டிற்றான் இயற்கைக்கு மாறான நிலை! அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் அவர்களை அவ்வாறு பேசச் செய்கிறது. தமக்கும் தாய்மொழி தமிழ்தான் என்றவுணர்வு அவர்தங் குருதியில் வற்றிவிட்டது. என் செய்வது? அவர்தம் உடலில் ஓடுங் குருதி, தூய்மையடைந்து, தாய்மொழியுணர்வுடன் பரவும் நாள் எந்நாளோ?

கல்வித் துறையில்

இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளி முதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம் ஆட்சி செய்கின்றன. இந் நிலையில் தாய்மொழியுணர்வு தலை தூக்குமா? பிஞ்சு நெஞ்சங்களிலேயே மொழியுணர்வு வேரோடு கல்லியெறியப்படுகிறதே! அப் பேசும் பொற்சித்திரங்கள், தம் பெற்றோரை அம்மா, அப்பா என்றழைக்கும் இன்னொலி, நம் செவியில் தேனாக வந்து பாயவில்லையே! அயன்மொழி வேரூன்றிய அவ்விளைய உள்ளங்களிலே ‘என் மொழி தமிழ், நான் தமிழன்’ என்ற உணர்வுகள் எப்படியரும்பும்? நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய இவர்கள் வளர்ந்து உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக் கழகங்கள்வரை அயன்மொழியிலேயே பயில்வாராயின், தாய் மொழியில் அறிவியலை எவ்வாறு வளர்ப்பர்? இரண்டுங்கெட்ட நிலையிற்றானே தடுமாறுவர். அத்தி-