பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகார் நோன்பு

9


முன்பு நிகழ்ந்தனவோ எனின் அதுவும் பொருந்தாது. கால மாறுபாட்டாலும் புதியவர் கூட்டுறவாலும் பற்பல விழாக்கள் புதியனவாகப் புகுந்தன. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ காலவகையால் இயல்பே யாதலின் இன்னோரன்ன மாற்றங்கள் நிகழ்வனவாயின.

சிலம்பும் மேகலையும் சிறப்புறக் கூறும் இந்திர விழா எந்நிலையெய்திற்று? சங்க நூல்கள் கூறும் விழாக்கள் யாவை? இவை எத்தகையன? அவை எவ்வாறழிந்தன என்னும் வினாக்களை எழுப்பி விடைகளை நாட முற்படின் நாம் வருந்தும் நிலையைத் தவிர வேறொன்றுங் காண்டல் இயலாது.

இன்று நம்மாற் கொண்டாடப் பெறும் விழாக்கள் அனைத்துக்கும் ஏதேனும் இலக்கியங்களிற் சான்றுகள் உளவோ? என்று நோக்கின் ஒன்றிரண்டு தவிரப் பலவற்றுக்குச் சான்றுகள் கிடையா. நாம் கொண்டாடும் விழாக்கள் பண்டிகையென்றும், திருநாள் என்றும், நோன்பு என்றும் பல்வகைப் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவை இன்றைய நிலையில் நமக்குத் தேவையா? இன்றியமையாதனவா? நாம் இவற்றைக் கொண்டாடுதல் வேண்டுமா? என்னும் வினாக்கள் ஒருபுறம் இருக்க அவ்விழாக்கள் தமிழர்க்கே உரியனவா? தமிழ் நாகரிகம் உடையனவா? வேறு நாகரிகங்களை அடிப்படையாகக் கொண்டனவா? பிறர்க்கே உரியனவாகி அவர்தங் கூட்டுறவால் நம்மிடைப் புகுந்தனவா? என்றெல்லாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். அவ்வெண்ணம் நம்மிற் பெரும்பான்மை யினர்க்கு எழுவது இல்லை. ஏதோ எல்லாரும் கொண்டாடுகின்றனர் நாமும் கொண்டாடுகின்றோம் என்ற பெரும் போக்கிலேதான் இயங்குகின்றோமே தவிர, எவை நமக்கே உரியன; எவை பிறர்க்கே உரியன? எவையெவை கலந்துள்ளன? என்று நாம் பிரித்துணர்வதேயில்லை. அவ்வாறு வேறு பிரித்துணர்வதால் தீதொன்றும் நேர்ந்துவிடப் போவதில்லை.

அரிசி தமிழர் உணவு என்று சொல்கிறோம். கோதுமை வடவர் உணவு என்கிறோம். இதனால் தீங்கா நேர்ந்துவிட்டது. விரும்பியோர் மாறி மாறி உண்கின்றோம். எனினும் இஃது இன்ன நாட்டுணவு என்னும் உணர்வு நம்மிடையே இல்லாமலா போய்விடுகிறது? அவ்வாறே நாம் கையாளும் ஒவ்வொரு துறையிலும் நம் பண்புகளை - நாகரிக இயல்புகளை ஆராய்ந்து தெரிந்துகொள்ளுதல் வேண்டும். அதனோடமையாது அவ்வத் துறைகளில் கலந்துள்ள வேறு நாகரிகங்களையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

நம் மொழியில் வேற்று மொழிச் சொற்கள் கலந்திருப்பது போல நம் விழாக்களிலும் அயல் நாகரிகங்கள் அறிந்தோ அறியாமலோ கலந்திருப்பது உண்மை. வெள்ளணி நாள் (பிறந்த நாள்) இன்றுங் கொண்டாடி வருகிறோம்.