பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

முடியரசன்


முந்தைய முறை வேறு. இன்றைய முறை வேறு. இன்று எரியும் மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைப்பதும் ‘கேக்’ வெட்டுதலும் பழக்கமாகி விட்டது. விளக்கேற்றுதல் நம் மரபு. விளக்கை அணைப்பது வேறு மரபு. அதாவது ஆங்கில மரபு. இவ்வாறு பிற நாகரிகக் கலப்பை அறிந்துகொள்வது நலம் பயக்கும்.

நாம் கொண்டாடிவரும் விழாக்களில் குறிப்பிடத்தக்கனவும் பரவலாக வுள்ளனவும் யாவை? ஐப்பசித் திங்களில் வரும் தீபாவளியும், தை முதல் நாளில் வரும் பொங்கலும், ஏசு பிறந்த நாளும், முப்பது நோன்பென்னும் ஈத்துப் பண்டிகையும் ஆகும். இவற்றுள் எது தமிழ் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டது? எது தமிழர்க்கே உரியது? எது பிறர்க்கே உரியது? என்றெல்லாம் ஓரளவு நுணுகிப் பார்க்கும் பண்பைத் தமிழர் நலத்தில் அக்கறை கொண்ட பெருமக்கள் பரப்பி வருகின்றனர். இவை தவிரப் புரட்டாசித் திங்களில் ஒரு விழா நாடெங்கிலும் கொண்டாடி வருகின்றோம். அவ் விழாவுக்கு ‘நவராத்திரி’ யென்றும் ‘தசரா’ என்றும் பெயர் கூறுவர். இது தமிழர்க்கே உரிய திருநாளா? பிறர்தங் கூட்டுறவாற் புகுந்த திருநாளா? எனச் சிறிது ஆய்ந்து உண்மை காண்பதே கட்டுரையின் நோக்கமாகும்.

இது பிறர்க்கே உரிய திருநாள்; இங்குக் குடியேறியோர் புகுத்திய திருநாள்; நாம் அவர்களைப் பின்பற்றிக் கொண்டாடுந் திருநாள் என்றே நம்மிற் பெரும்பாலோர் நம்பி வருகின்றனர். அந் நம்பிக்கைக்குக் காரணம் அவ் விழா நிகழ்ச்சி பற்றித் திரித்து விடப்பட்ட கட்டுக் கதைகளும் புராணக் கோட்பாடுகளுமேயாகும். மேலும் அவ் விழாவின் பெயர் ‘நவராத்திரி’, ‘தசரா’ என்று பிற மொழிப் பெயராக இருப்பதாலும் இது நம்மவர்க்கு உரியதன்று என மேற்போக்காகக் கருதிவிட்டோம். நுணுகிப் பார்த்திருப்பின் உண்மை புலனாகியிருக்கும். தமிழ்ப் பண்பை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளையும் பிறவற்றையும் தமிழ்ச் சொற்களாற் குறியாமல் பிறமொழிச் சொற்களாற் குறிப்ப தால் விளையுந் தீமைகளுள் இதுவும் ஒன்று எனலாம். உண்மையில் இஃது எவர்க்குரியது? என்பதைக் காய்தல், உவத்தல் அகற்றி ஆய்ந்து முடிவு காண்போம்.

‘நவராத்திரி’ என்பதற்கு ஒன்பது இரவுகள் என்பது பொருள். ‘தசரா’ என்றால் பத்து இரவுகள் என்று பொருள். விழா கொண்டாடும் இரவுகள் ஒன்பதா? பத்தா? என்பது பெயர் வைத்தவர்களுக்கே குழப்பமாக இருந்திருத்தக்க வேண்டும். ஆதலின், அப்பெயரிலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் முதலில் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

பெயரை விடுத்து, இவ் விழாவில் நிகழும் நிகழ்ச்சிகளைச் சிறிது காண்போம். இத் திருநாள் கொண்டாடப் பெறும் நாளில் முதலிடம்பெறுவது