பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகார் நோன்பு

11


கொலு நிகழ்ச்சியேயாகும். இல்லங்களில் அழகிய பொம்மைகளைப் பல வகையாக நிரல்பட வைத்து அழகுறச் செய்வதே கொலுவாகும். அவ்வவர் செல்வ நிலைக்கேற்பவும் கற்பனைத் திறனுக்கேற்பவும் வீடுகளிற் பொம்மைகளின் எண்ணிக்கையும் காட்சிப் பொலிவும் அமையும். மக்கள் நாகரிக முதிர்ச்சிக்கேற்பவும் பழக்க வழக்கங்களுக்கேற்பவும் பலவகைக் கோலங்கள் பெற்றுத் திகழும் இக்கொலு நிகழ்ச்சி கண்டு களிக்க வருவோர்க்குத் தின்பண்டங்கள் வழங்கலும் நிகழும். பொம்மைகளை அழகுற அமைத்துக் கொலு வைத்துக்கொண்டு கண்டு மகிழ்வதும் பிறரை மகிழச் செய்வதும் தின்பண்டங்கள் பரிமாறிக் கொள்வதும் குழந்தைகள் பொருட்டுச் செய்யும் செயலா? பெரியவர் பொருட்டுச் செய்யும் செயலா? அவை சிறுவர்க்காகச் செய்யுஞ் செயலே என்பதில் ஐயமே இல்லை. பெரியவர் பொம்மை வைத்து விளையாடுவது பேதைமையன்றோ? மேலும், பெரியவர் ஆடும் விளையாட்டை எவர்தாம் கண்டுகளிப்பர்?

அடுத்து இத் திருநாளில் பள்ளிச் சிறுவர்கள், கோலாட்டம் அடித்து ஆடுவதும் உண்டு. காண்பார்க்குக் களிப்பூட்டித் தாமும் இன்புறுவர். இக் கோலாட்ட நிகழ்ச்சியும் சிறார்க்கே உரியது. பெரியோர் கோலாட்டம் ஆடிற் கண்டு களிப்போர் யாவர்? காட்சிக்கு இன்பந்தான் நல்குமா? சிறு மகார் ஆடின் இன்பக் காட்சியாக விளங்கும். ஆகவேதான், பள்ளிச் சிறார் ஆடி இன்பமூட்டுகின்றனர். எதிர் எதிராக நேர்வரிசையில் நின்று கோலாட்டம் அடித்து ஆடுவர். வட்டமாக நின்றுகொண்டும் ஆடுவதுண்டு. சிறு சிறு கயிறுகளில் கோலாட்டக் குச்சி களைக் கட்டிக் கொண்டு பின்னல் கோலாட்டம் என்னும் பெயராலும் ஆட்டம் நிகழும். இவ் வண்ணம் திறமைகளுக்கேற்ற வகையில் இக் கோலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். செட்டிநாட்டில் செவ்வனே நிகழ்ந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சி வரவர அருகிக்கொண்டே வருகிறது. இதற்கு மாறாக கொலு நிகழ்ச்சி எங்கும் பெருகிக்கொண்டே போவதுடன் அமையாது கோவில்களுக்குள்ளும் நுழைந்திருக்கிறது.

மற்றொரு நிகழ்ச்சியும் இவ் விழாவில் நிகழ்வதுண்டு. நம் நாட்டுச் சிறுவர்க்குக் கல்விப் பயிற்சி, பெரும்பாலும் புரட்டாசித் திங்களில் இத்திருநாளிலேதான் தொடங்கும் பழக்கம் இருந்து வந்தது. இந் நிகழ்ச்சியும் காலப் போக்கால் குறைந்துகொண்டே வருகிறது. கல்வி தொடங்கும் இந் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றதுண்டு. குழந்தைகட்குப் புத்தாடை முதலியவற்றால் நன்கு ஒப்பனை செய்து மேளதாளங்களுடன் உற்றார் உறவினர் புடைசூழப் பள்ளிக்கு அழைத்துச் சென்று நல்லாசிரியரைக்கொண்டு எழுத்துப் பயிற்சியைத் தொடங்கி வைப்பர். கல்வி தொடங்குதல் பிள்ளைப் பருவத்திலே நிகழ வேண்டிய செயலேயாகும். ஆதலின் இந் நிகழ்ச்சியும் சிறுவர்களைப் பொறுத்ததேயாகும்.