பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருமையா? ஒற்றுமையா?

17


அதற்குச் சுவையும் கூடுகிறது. இவ்வாறு ஒன்று மற்றொன்றுடன் கலந்து, தன் தனித்தன்மையை இழந்து அந்த மற்றொன்றுக்கு வலிமை கூட்டுவது ஒருமை.

மலரும் மாலையும்

பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு ஒரு மாலை தொடுக்கிறோம். பல்வேறு நிறமும் பல்வேறு மணமும் கொண்ட மலர்கள் அனைத்தும் ஒன்றுகூடி மாலையாகி அழகு தருகிறது. ஆயினும், ஒவ்வொரு வகை மலரும் அதனுடன் நிறத்துடனும் மணத்துடனும் பொலிந்து நிற்கும். தனித்தன்மையை இழந்து விடுவதும் இல்லை. மாலையிலிருந்து பிரிக்கப்படினும் அவ்வம்மலர்கள் தத்தமக்குரிய நிறத்துடனும் மணத்துடனும் மிளிரும். இவ்வாறு பல பொருள்கள் தத்தம் தனித்தன்மையை இழந்துவிடாது, கூடி நின்று, பின்னர்ப் பிரியினும் பண்டைய நிலையில் இருப்பது ஒற்றுமை எனப்படும். சுருங்கக் கூறின் ஒன்றுக்குள் ஒன்று கலந்து மறைவது ஒருமை. ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ்வது ஒற்றுமை.

பாரதி விளக்கம்

ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணர்ந்த பாரதியார் நமக்குத் தெளிவு பிறக்கும் வகையில் பாடியுள்ளார்.

“செப்புமொழி பதினெட்டுடையான்-எனில்

சிந்தனை ஒன்றுடையான்”

என்னும் பாரதியார் பாடல் ஒற்றுமை என்னும் சொல்லுக்கு விளக்கம் தருவதை விடப் பிறிதொரு விளக்கம் வேண்டுவதோ? அவர் காட்டும் நெறியில் கருத்தைச் செலுத்தினால் செப்புமொழி பதினெட்டாகவும் சிந்தனை ஒன்றாகவும் இருப்பதுதான் ஒற்றுமை என்பது நன்கு புலனாகும். இவ்வாறின்றிச் செப்புமொழி ஒன்றாகவும் சிந்தனை பதினெட்டாகவும் இருப்பின் ஒருமையாகும். இதனால் நாட்டுக்கு வலிமையோ, வளர்ச்சியோ, பொலிவோ, பெருமையோ ஏற்படும் என்பது ஐயப்பாட்டுக்குரியது.

உண்மையான நாட்டுப் பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட பாரதியார் இவ்விரு சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணர்ந்தவ ராதலால் நாடு வாழ்தல் வேண்டும் என்ற மனநிலையிற் பாடுகின்றார். இந்திய ஒற்றுமையைப் பல்வகையிலும் வலியுறுத்திப் பாடும் இயல்புடைய அவர்,

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில்

ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு”

என்று பாடுகின்றார். இப் பாடலில் மிகுந்த உன்னிப்புடன் ஒற்றுமை என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்; ஒருமை எனுஞ் சொல்லைப் பயன்படுத்தவில்லை. இந்தியா நல்வாழ்வு பெற ஒற்றுமை வேண்டற்பாலது. அவ்வொற்றுமையைச் சிந்தனை ஒன்றாக இருந்தால் மட்டுமே உண்டாக்க இயலும்.