பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

முடியரசன்


அதை விடுத்து மொழி ஒன்றாக இருப்பதாலோ ஆட்சி ஒன்றாக இருப்பதாலோ உண்டாக்கிவிட இயலாது என்பது அவர்தம் கருத்து.

ஆதலின், இவ்விரு சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணர்ந்து கொண்டு இந்தியா வலிமையுள்ள நாடாக விளங்க ஒருமை வேண்டுமா? ஒற்றுமை வேண்டுமா? என்பதை அரசியல் சீர்வாய்ந்த நல்லோர் ஆய்தல் நன்று.

இந்தியா பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள் பல்வேறு பண்பாடுகள், நாகரிகங்கள் கொண்ட பல்வேறு மாநிலங்களடங்கிய நாடு. அம் மாநிலங்களில் உள்ள இனம், மொழி, பண்பாடுகள் தத்தம் தனித்தன்மையை இழந்து ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என இரண்டறக் கலந்து விடுவதுதான் நோக்கமெனில் ஒருமைப்பாடு என்ற சொல்லே பொருத்தம் உடையது. அவ்வாறன்றி, அந்தந்த மாநிலத்து இனம், மொழி, பண்பாடு கெடாமல், தனித்தன்மையை இழந்து விடாமல் காத்துக்கொண்டு இந்திய ஒன்றியத்திற் கூடி வாழ்வது நோக்கமெனில் ஒற்றுமை என்ற சொல்லே சாலப் பொருத்தமுடைத்து.

ஆதலின், நாட்டின் நலங் கருதும் நல்லோர், உண்மையான நாட்டுப் பற்றுடையோர், உலக அரங்கில் இந்தியா உயர்ந்த புகழைப் பெறுதல் வேண்டும் என்று விழைவோர், ஒன்றுபட்டுக் கூடி வாழும் நல்லெண்ணங் கொண்டோர் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டிய சொல் ஒருமையா? ஒற்றுமையா?