பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை பிறந்த கதை

21


செய்த பாடல்கள் முடியரசன் கவிதைகள் என்னும் நூலில் வெளிவந்துள்ளன. அவை இவைதாம்.

‘கம்பன் புகன்றதெனக் கட்டுரைத்த பாக்கடலுள்
நம்பிக் குளித்து நலங்கண்டான் - அம்புவிக்கு
முத்தெடுத்துக் கோத்து முழுநூலில் தந்திட்டான்
நத்துதமிழ்ப்பாவை நயந்து.

முத்தெடுக்க மூழ்கி முருகப்பாபட்டதுயர்
தித்திக்கும் செந்தமிழேதேர்ந்துணரும் - வைத்திருந்த
தஞ்சை மன்னன் ஏடுரைக்கும் தக்கபுலவோர்குழுவின்

நெஞ்சரைக்கும் இவ்வுலகில் நின்று.’

குழந்தைகளைப் பற்றிய என் பாடல்கள், பெரும்பாலும் என் குழந்தைகளை மய்யப் பொருளாகக் கொண்டவையேயாகும். ஒருமுறை என் மகன் பாரியென்பவன் தொட்டிலில் துயின்று கொண்டிருந்தான். துயிலும் அழகைப் பார்த்துக்கொண்டே நின்றேன். குழந்தைகளிடம் மிகுந்த ஈடுபாடு கொள்ளும் இயல்புடையவன் நான். அதனால் நீண்ட நேரம் அக் காட்சியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வீடுபாடு என் கவிதையுணர்வைத் தூண்டிவிட்டது. கவிதையும் பிறந்து விட்டது.

“மோனத் துயில்கொள்ளும் போதினிலே - இசை
மூடிக் கிடக்கும்கண் மீதினிலே
ஞானச் சுடரொளி வீசுதடா-தெய்வம்

நண்ணிவந்தென்னெஞ்சிற் பேசுதடா”

என்பது அப் பாடலாகும். பின்னர், முன்னும் பின்னும் சில கண்ணிகளைச் சேர்த்துப் பாடிப் ‘பேசுந் தெய்வம்’ என்ற தலைப்பிட்டு வெளியிட்டேன். இப் பாடல் ‘சாகித்திய அகாதமியால்’ இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ‘காவியப் பாவை’ என்னும் நூலில் வெளிவந்துள்ளது இப் பாடல்.

பின்னர் அவன் பிள்ளைப் பருவங் கடந்து பள்ளிப் பருவம் எய்தினன். ஒருநாள் அவனை அடித்து விட்டேன். அவன் அழுதுகொண்டே உறங்கி விட்டான். அவன் அழுதது கண்டு துடித்துப் போனேன். “உன் கண்ணில் நீர் வடிந்தால், என்னெஞ்சில், உதிரங்கொட்டுதடி” என்று பாரதி பாடியது உண்மையென உணர்ந்தேன். உணர்ச்சி வயப்பட்ட நான் உறங்கும் அவனைப் பார்த்தேன். உள்ளுணர்ச்சி வெளிப்பட்டது கவிதையாக. பாடல் இதோ.

‘அடஞ்செய்தாய் நீ என்றடித்தேன் - பின்னர் அழுகின்ற
கண்கண்டு நெஞ்சந் துடித்தேன்
குடங்கையில் கன்னத்தைச் சேர்த்துத் துயில்வாய்

குறுநெற்றி எழில்காட்டும் மேலாக வேர்த்து.’