பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

முடியரசன்


னோரன்ன காப்பியங்களே வெளிவந்துள்ளன. இவற்றுள்ளும் கால வெள்ளத் தால் எவை எவை இழுத்துச் செல்லப்படுமோ எவை காலத்தைத் தாண்டி நிற்குமோ? அறியோம்.

நாடகக் காப்பியங்களைப் பொறுத்தவரையில் இந்நூற்றாண்டில் நாம் ஒன்றுங் கூறவியலா நிலையிற்றான் உள்ளோம். இத் துறையைப் பற்றிக் கவி வாணர்கள் சிந்திப்பதாகத் தோன்றவில்லை. தனிச் செய்யுளில் ஏற்பட்ட ஆர்வமும், காலம் நீளுமே என்ற அச்சத்தால் தோன்றிய பொறுமை யின்மையும் அதற்குக் காரணங்களாக இருக்கக் கூடும். குழந்தைகளுக்காகப் பாடப்படுகின்ற பாடல்கள் நூல் வடிவிற் சில வந் துள்ளன. பேராசிரியர் மயிலை சிவமுத்து, பாவலர் பாலசுந்தரம், அழ.வள்ளியப்பா, நாக.முத்தையா, நாரா.நாச்சியப்பன், இரா.இராசகோபாலன், இரா.பொன்னரசன் முதலிய கவிவாணர்கள் குழந்தை இலக்கியங்கள் புனைந்து பெருந்தொண்டாற்றி வருகின்றனர். இத் துறையில் பாரதியார் வெற்றி வீரராகக் காட்சி தருகின்றார். கவிமணி அவரையும் விஞ்சி நிற்கின்றார். இவர்களைப் போன்ற பழுத்த நல்லறிவாளர் இத்துறையில் ஈடுபடுவராயின் நல்லுலகில் நாம் வாழ முடியும்.

குழந்தையுள்ளம் வளரும் உள்ளம். அவ்வுள்ளம் சீரிய முறையில் மேன் மேலும் வளர்ச்சி பெறக் கவிதைகள் உறுதுணையாக இருத்தல் வேண்டும். அக் கவிதைகள் நல்ல கருத்துகள், எளிய-இனிய-சிதையாத தமிழ்ச் சொற்கள், அவர்களைப் பண்படுத்தும் நிகழ்ச்சிகள் உள்ளடங்கியிருத்தல் வேண்டும். வருங்கால மக்களை உருவாக்கும் ஒர் அரிய கருவியே குழந்தை இலக்கியம். குழந்தை இலக்கியம் இன்னுஞ் சிறந்த முறையில் பயன்தரும் வகையில் வளருதல் வேண்டும் என்னும் ஆசையால் இக் கருத்து வெளியிடப்படுகிறது.

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, பாபநாசம் சிவன், சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன், முடியரசன் போன்றோர் இசைப்பாடல்கள் பல புனைந்துள்ளனர்.

இவை இசைப் பாடலுக்கேற்ற மரபு, வடிவம் உடையனவாக அமைந்துள்ளன. திரைப்படத்துறையில் வரும் இசைப்பாடல்கள் பெரும்பாலும் கவிதைத் தன்மையிழந்து வடிவின்றி மரபின்றி மின்மினிகள் போலப் பளிச்சிட்டு உலா வருகின்றன.

பரம்பரை உணர்வு

இலக்கியப் பரம்பரையுணர்வு, கவிஞர்களிடத்து மிளிர வேண்டிய இன்றியமையாத ஒரு பண்பாகும். தொன்றுதொட்டு வளர்ந்து வரும் கவிஞர் பரம்பரையில் நானும் ஒருவன் என்ற எண்ணம் இருந்தாற்றான் கவிஞன் சிறப்பெய்த முடியும். முந்தையரை மதிக்காத கவிஞனும் தந்தையைப் பேணாத தனயனும் ஒரு நிலையினரே. வாழையடி வாழை என வந்த திருக்கூட்டம் என்னும்