பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை


கவிஞர் முடியரசன் மறைந்துவிட்டாலும் அவரது தமிழ் உணர்ச்சியும், அந்த உணர்ச்சியோடு அவர் தந்த இலக்கியப் படைப்புகளும் என்றும் தமிழர்கள் நினைவில் நிற்கும்.

எந்தன் இளமைக்காலத்தில் 'முத்தாரம்' இதழில் எழுதும் முத்தான கவிஞர்கள் சிலர் : வாணிதாசன், முடியரசன், கருணானந்தம் ஆகியோர். அந்தக் காலகட்டத்தின் திராவிட இயக்கக் கவிஞர்கள் இவர்கள். கண்ணதாசன் தென்றல் இதழிலும், பொன்னிவளவன் போன்றோர் சற்றுப் பிந்திய கால கட்டத்திலும், சுரதா போன்றவர்கள் பாவேந்தர் வழியிலும் மிகச் சிறப்பான முறையில் எழுதி வந்தனர்.

அப்படிப்பட்ட முடியரசன் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரது குடும்பத்திற்கு உருபா 10 இலட்சம் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டது. இதனை வழங்கும் துறையின் அமைச்சராக அன்று இருந்தவன் எனும் முறையில் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுவதில் இனம் புரியாத மகிழ்ச்சி.

பல்வேறு காலகட்டங்களில் முடியரசன் எழுதிய கட்டுரைகள், பேசிய பேச்சுகள் இதில் இடம் பெற்றுள்ளன.

"பிற நாட்டினர்க்கு மொழிப்பற்று, மொழியுணர்ச்சி என்பது இயல்பாக வாய்த்த ஒரு பண்பு: தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்ச் சான்றோர் தட்டித் தட்டி எழுப்பியும், அரசியல் தலைவர்கள் போர்ப்பறை சாற்றியும் மொழிப்பற்றை உண்டாக்க வேண்டிய ஒர் அவலநிலை இருந்து வருகிறது” என்கிறார் கவிஞர். அவருடைய வருத்தம் சரியானது. நானும் பார்க்கிறேன். தமிழ் வழிபாடு பற்றிய வேகமும், தமிழ் வழிக்கல்வி பற்றிய போர்க்குணமும் இப்போது மங்கி விட்டனவோ என்று எண்ணும் நிலைதான் உள்ளது.

இந்தி எதிர்ப்புப் போரின் போது காட்டப்பட்ட உணர்ச்சி தமிழர்களிடத்தில் தொடர்ந்து இங்கிருந்திருந்தால் நமது எதிரிகள் இங்கே அடிக்கடி வால் நீட்டும் தொடர்கதை நடந்திருக்காது. அவ்வப்போது அவற்றை ஒட்ட வெட்டாத காரணத்தாலேயே சிலர் தொடர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே அவ்வப்போது தட்டித் தட்டி எழுப்ப வேண்டியுள்ளது எனும் கவிஞரின் கருத்து முற்றிலும் சரியே.