பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

கூட்டுக் களியினிலே கவிதை


ஒருமைப்பாடு

சொல், சீர் முதலியன நிரல்படநின்று, இனிய ஓசை பொருந்தி செறிந்த பொருளுடையதாய், அணி அமைப்புங்கொண்டு, பயில்வார் தம் உள்ளுணர்ச்சிகளைத் தட்டி எழுப்ப வல்லதாய், அவர்தம் உள்ளங்களை எல்லாம் தன்பாற் கவியச் செய்யும் ஆற்றல் உடையதாய் அமைவதே கவிதை எனப்படும். உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்படும் கவிதைக்கே உள்ளங்களைத் தன்பால் ஈர்க்கும் ஆற்றல் உளதாகும். கவிஞன் ஒரு பொருளைக் காணுங்கால், தான் வேறு அப் பொருள் வேறு என்ற வேறுபாட்டுணர்வு மறைந்து, அப் பொருளும் தானும் ஒன்று என்ற நிலை ஏற்படும்பொழுதுதான் - அஃதாவது அதனோடு கூடும் பொழுதுதான் உண்மைக் கவிதை பிறக்கிறது. அக் கூட்டுணர்விலேதான் உணர்ச்சி ததும்பும் சொல்லோவியங்கள் பிறக்க முடியும். அவ்வாறு பிறக்கும் பாட்டுத் திறத்தால் மட்டுமே இவ் வையத்தைப் பாலிக்க முடியும், வையத்து மக்களை ஈர்த்துத் தன் வயப்படுத்த முடியும். இவ்வண்ணம் வயப்படுத்த வல்லதே சிறந்த கவிதை என உலகத்தால் மதிக்கப் பெறுகிறது.

கவிஞன் ஒரு பொருளைக் கண்டு அதனோடு ஒன்றிக் கூடுங்கால் அவன் உள்ளங் கனிகிறது. அக் கனிவிலிருந்துதான் கவிதை தோன்றுகிறது. ஏனைய நேரங்களில் வெளிவருவன கவிதை என்ற பெயர் பெறும் தகுதியை இழந்துவிடுகின்றன. இவ்வுண்மையை நாவுக்கரசர் நன்கு வலியுறுத்துகின்றார். “உளங்கனிந்த போதெல்லாம் உவந்து உவந்து பாடுதுமே” - என்னும் வாய் மொழியைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். கவி வல்லார் என்ற காரணத்தாலேதான் நாம் அவரை நாவுக்கரசர் என்கிறோம். அப் பெருமகனாரே உளங்கனிந்த போதுதான் கவிதை வரும் என்னும் குறிப்பை உணர்த்திச் சென்றார் எனின் பிறிதொரு சான்றும் வேண்டுவதோ?

கூட்டுக்களி

கவியரசர் பாரதியாருக்கு ஆசை ஒன்றுண்டு. அஃது இவ் வையத்தைப் பாலிக்க வேண்டும் என்பதாகும். எத்திறத்தால் பாலிப்பது? படைத்திறத்தாலா?