பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டுக் களியினிலே கவிதை

35


என்ற பாரதியாரின் கவிக்கனவை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். நனவையிழந்த கனவுதான் பாவலன் காணும் கனவு. விழிப்பு நிலையாயினும் நனவு அழிந்துவிடுகிறது. அஃதாவது தன்னை மறந்துவிடும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்பது கருத்து. அப்பொழுதுதான் கவிதை வெறி மூண்டெழும்.

ஊடுருவும் கண்கள்

இவ்வாறு தன்னை மறந்த நிலை - பொருளோடு ஒன்றும் நிலை எப்பொழுது, எப்பொருளைக் காணும்பொழுது ஏற்படுகிறது? எந்தப் பொழுதிலும் எப்பொருளைக் காணினும் கவிஞன் மட்டும் அந்நிலையைப் பெற்று விடுகின்றான். நிலவைக் காணினும் இருளைக் காணினும், மயிலைக் காணினும், காகத்தைக் காணினும், குழவி, கிழவர், மருதம், பாலை எப்பொருளைக் காணினும் கவிஞனுக்கு அந் நிலை தானாகவே உண்டாகிவிடுகிறது. கவிஞன் கண்களுக்கும் மற்றையோர் கண்களுக்கும் உள்ள வேறுபாடு அதுதான். அந்தக் கண்களுக்கு ஒரு தனி ஆற்றல் இருக்கத்தான் செய்கின்றது. எப்பொருளையும் ஊடுருவிச் சென்று அதனுள் அமைந்து கிடக்கும் அழகியலையெல்லாம் கண்டு கண்டு கழிபேருவகை கொள்ளும் ஆற்றல் பெற்றவை அக்கண்கள். கட்புலனாகாப் பண்புகளிலும் அப்படியேதான். அக்கட்புலனாகாப் பண்புகளுள் காதல், அன்பு என்ற இன்னோரன்ன பொருள்களிலேதான் உலகினர் உள்ளம் படியும் - சுவைக்கும். ஆனால், கவிஞன் உள்ளமோ அவ்வாறன்று. அன்பு, கொடுமை, காதல், அவலம், வெகுளி, உவகை-எப்பொருளாயினும் சரி அதனுள் படியும்; அதனைச் சுவைக்கும்; மற்றவரையும் சுவைக்கச் செய்யும். இத்தகு ஆற்றல் பெற்றது கவி உள்ளம். ஆகவே, காணும்பொருள் அழகியதாயினும் அழகற்றதாயினும், இன்பமாயினும், துன்பமாயினும் அதனுடன் ஒன்றி, ஈடுபட்டுத் தன்னை மறந்து பாடுகின்றான் கவிஞன். இவ்வுயர்நிலையை - கவிப் பண்பை, நனவழியத் தோன்றும் கனவு நிலையை நம் சங்க இலக்கியங்களில் தொட்ட இடமெல்லாம் காணலாம். அவ்விலக்கியங்களில் ஓரிரு காட்சிகளைக் காண்போம்.

ஒல்லையூர் முல்லை

ஒல்லையூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்த சாத்தன் ஒரு பெருவீரன்; ஈத்துவக்கும் பண்பும் உடையவன். அவனுடைய உயர்குணங்களைக் கேட்டறிந்த குணவாயிற் கீரத்தனார் என்ற புலவர் அவனை நாடி அவ்வூருக்கு வருகிறார். வந்தவிடத்து அவன் இறந்துபட்டான் என்ற செய்தி எட்டுகிறது அவருக்கு, உள்ளம் துணுக்குற்றார். பரிசில் பெற்றிலேமே என்ற வருத்தம் அவருக்கில்லை; வீரனும் வள்ளலும் ஆகிய ஒரு பெருமகன் இறந்தானே! இனி, பாணர் பாடினியர்க்குப் புகல் யார்? என்ற பெருநோக்கு அவர் நெஞ்சில் அவலத்தைத் தேக்கியது. செயலற்ற நிலையோடு திரும்புகின்றார்.