பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

முடியரசன்


ஓடியிருப்பாரா என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படிப் பேசுகிறாள் கண்ணகி. இளங்கோ பாடியதாயினும், படிக்கும்போது இளங்கோ பாடுவதாக நமக்குத் தோன்றவில்லை; கண்ணகிதான் பேசுகிறாள் என்ற உணர்வே உண்டாகி விடுகிறது. இவ்வாறு கவிஞன் அவ்வுணர்வோடும் பொருள்களோடும் ஒன்றி நின்று பேசும் பலப்பல காட்சிகளே நம்முன்னைய இலக்கியங்களிற் பரக்கக் காணலாம்.

கம்பன் தன்மை

இவ்வாறு ஒன்றி நின்று பேகம் கவிதைப் பண்பு கம்பனிடத்தில் எவ்வாறு அமைந்து கிடந்தது என்பதையும் சிறிது காண்போம். இராமனுக்கு ஏற்றந்தர எழுந்த நூலே இராமகாதை. ஆகவே கம்பன் ‘இராமபக்த’னாகத்தான் இருக்க முடியும். ஆயினும், இராமனுடைய குலப்பகைவனாகிய இராவணனும் வருகிறான்; பேசுகிறான். அவன் பேசும்பொழுது இராமனுக்கு ஏற்றங் குறைந்து விடுமே என்று கம்பன் நினைந்தானல்லன். நினைந்திருப்பின், தான் என்ற எண்ணம் அங்கே தலைதூக்கிவிடும். அப்பொழுது இராவணன் பேசுவதை நாம் கேட்க இயலாது; கம்பன் பேச்சுதான் கேட்கும். ஆனால் ‘கவிச்சக்கரவர்த்தி’ எனப் புகழ்பெற்ற கம்பன் தவறுவானா? அவனும் இராவணனாகிவிடுகிறான். இராவணனோடு கலந்துவிடுகிறான். ஆகவேதான் உண்மையான இராவணன் பேச்சை நம்மால் கேட்க முடிகிறது.

இலங்கையில் தன் உடன்பிறந்தானைத் தவிக்கவிட்டு, இராமனைக் குலப்பகைவன் என்றும் கருதாமல் அவனிடம் ஓடி உடன்பிறப்புக்கு ஊறு செய்யும் வீடணனாகவும் ஆகிவிடுகிறான். அதே நேரத்தில் இராவணனுக்கு அருகிலும் கடமை உணர்ந்தவனாகக் கும்பகருணன் உருவத்தில் கம்பன் நிற்கிறான். மிதிலையில் காதலின் திரு உருவமாகச் சானகியாக நிற்கிறான்; பின்னர் அவலத்தின் மறு உருவமாக அசோகவனத்துச் சீதையாகவும் நிற்கிறான்; அனுமனாகிறான்; அரக்கனாகிறான்; வாலியாகிறான்; வானவனாகிறான்; எளிய தோழி நீலமாலையும் ஆகிவிடுகிறான் கம்பன். இன்று திரைப்படங்களில் இரட்டை வேடம் அணிந்து நடித்துப் புகழ் பெறும் நடிகர்களைப் போல வேறுபட்ட பல வேடங்களும் பூண்டு, அவற்றுக்கேற்ப நடித்துப் பெரும் புகழுக்குரியவனாகி விடுகிறான் கம்பன்.

புளிஞர் வேந்தன்

காப்பிய உறுப்பினர்களுடன் கம்பன் ஒன்றுபடும் தன்மைக்கு எடுத்துக் காட்டாக ஒன்று காண்போம். படை தொடர வரும் பரதனைக் கண்ட குகன் அவன் போருக்குத்தான் வருகிறான் என மாறாகக் கருதித் தன் தோழர்களை அழைத்துப் போருக்கு அணியமாக இருக்குமாறு வீரவுரை ஆற்றுகிறான். அப்பொழுது,