பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

எப்படி வளரும் தமிழ்?


தாகூருக்குக் கூடத் தமிழர்களின் நிலை தெரிந்திருக்கிறது. “தாய் மொழியையும் அதில் உள்ள இலக்கியங்களையும் மதிக்காமல், வேறு மொழிகளுக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அளவு வேறு நாட்டில் இல்லை” என்கிறார். இதை நம் கவிஞர் வேதனையோடு எடுத்துக்காட்டுகிறார்.

அவர் ம. பொ.சி.யின் குரலாக எடுத்துக்காட்டியதே இன்றைய தமிழர் களுக்குப் பொருந்தும் என்று கருதுகிறேன்.

அதன்படி “தமிழ்நாட்டில் உடற்சட்டையெடுத்த ஒவ்வொருவனுக்கும் தமிழ் சொந்தம்” என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும். காரைக்குடியின் மகர்நோன்புப் பொட்டல் வழியாக அடிக்கடி பயணம் செய்பவன் நான். இது ‘மகார்நோன்பு' என்று கூறி முழு விளக்கமும் அளித்து, வேறுபகுதிகளில் இந்த விழா நிகழ்ச்சி இல்லாது போய்விடினும், செட்டி நாட்டுப் பகுதிகளில் இன்றும் இருப்பதைக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.

இழந்த உரிமைகளை - நாகரிகங்களை மீண்டும் பெற்றுத் திகழத் தூண்டும் கட்டுரை இது.

‘ஒருமையா? ஒற்றுமையா?’ எனும் கட்டுரையும் நமது அறிவுக்கு விருந்தாக அமைகின்றது.

‘கவிதை பிறந்த கதை’ - கவிதையின் வரலாறு மட்டுமன்று; கவிஞரின் வாழ்க்கை வரலாறும் கூட.

நானும் எத்தனையோ கவிதைகளை எழுதியுள்ளேன். ஆனால் 1965இல் கவிஞர் முடியரசன் தலைமையில் நான் பாடிய ஓர் எண்சீர் விருத்தம்தான் நான் இன்றைக்கும் எடுத்துக்காட்டும் கவிதை.

‘இன்றேனும் களையட்டும்’.......

எனும் கவிதைக்குத் தலைமை பூண்ட முடியரசனுக்குப் பேருந்து நிலையத்திலும், பேருந்திலும் கூடக் கவிதை பிறக்கும் என்பதனை இவர் எழுத்திலிருந்து உணரமுடிகின்றது. கவிதை ‘Spondaneous overflow of powerful feelings’ என்பது எவ்வளவு பெரிய உண்மை? அதனால் கவிதை வடிவம் எடுக்கும்போது அதற்கு நேரம் காலமோ, ஏந்து மிக்க இடமோ தெரியாது. கனவிலும் கவிதை பிறக்கும். இது முக்காலும் உண்மை. அத்தர் விற்பவனைப் பற்றிய கவிதை எவ்வளவு இயற்கையாக அமைந்திருக்கிறது பாருங்கள்.

‘பூசுவது நம்முடலில் ஒன்று - சின்னப்

புட்டியில் அடைத்துக் கொடுப்பது மற்றொன்று’

வெளிப்படையான உண்மை. போத்தலில் (bottle) என்ற சொல்லைக் கவிஞர் பயன்படுத்துகிறார். புட்டியில் என்று போட்டிருந்தால் நல்ல தமிழ்ச்சொல்லும், சந்தம் கெடாத நிலையும் கிடைத்திருக்கும் என்று கருதுகிறேன்.