பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

முடியரசன்


வேகத்தோடு சொற்கள் வெளிவரினும் நகைச்சுவையைக் கலந்து குழைத்து வேகத்தின் கடுமை தோன்றாவண்ணம் செய்துவிடுவது இவருக்குள்ள தனிச்சிறப்பாகும்.

மக்களிடையே நெளியும் சாதிப் புழுக்களை அறவே ஒழித்துப் பெண்ணடிமை தொலைத்து, ஆண் பெண் அனைவருமே கல்வி அறிவுடையவராய் விளங்கி, ஒன்றுபட்ட முன்னேற்றமுற்ற குமுகாயம் மலர்தல்வேண்டும். பொருளியலிலே செல்வன், ஏழை என்ற ஏற்றத்தாழ்வு தகர்ந்து, உழைப்பவனுக்கும் இவ்வுலகம் பொதுவுடைமை என்ற எண்ணம் வளர்தல் வேண்டும். அரசியலில் தூய்மையும் நேர்மையும் மலர்தல் வேண்டும்; தமிழ்மொழி தனக்குரிய சிறப்பை மீண்டும் பெற்று உலக மொழிகளில் ஒன்றாக அது மலர்தல் வேண்டும்; கைம்மைக் கொடுமையைக் களைந்தெறிந்து, கட்டாயத் திருமண முறையை முறியடித்து, காதல் மணத்தைக் கடைப்பிடித்துப் பெண்ணுலகு மலர்தல் வேண்டும் என்ற இத்தகைய மறுமலர்ச்சிக் கருத்துகளை மய்யமாக வைத்துப் பாடப்பட்டனவே பாரதிதாசன் பாடல்கள்.

இவர்தம் பாடல்களிலே சொற்சிக்கனத்தைக் காணலாம்; உணர்ச்சி பெருக்கெடுத்தோடுவதைக் காணலாம்; பா நடையில் ஒரு தனி மிடுக்கைக் காணலாம். பாடல்களை நாம் படிக்கும்போது அவை நம் குருதியுடன் குருதியாகக் கலந்துவிடுகின்றன. நரம்புகளில் உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறது; சுவைக்கச் சுவைக்க சுவை உணர்வு மேலோங்குகிறது; அவற்றைப் படிக்கும்போது நாம் பாரதிதாசனாகவே ஆகிவிடுவதும் உண்டு; படிக்குந்தோறும் நாமும் பாடலாமா என்ற நினைப்புத் தோன்றும்; நினைப்பு மட்டுமென்ன? பாடியும் விடுகிறோம்; அதன் விளைவாகத்தான் இன்று நூற்றுக்கணக்கான பாரதிதாசனைத் தமிழகத்தில் காண்கின்றோம்; ஒரு நீண்ட தலைமுறையை (பரம்பரையை)த் தோற்றுவித்த பெருமை பாரதிதாசன் பாடல்களுக்கே உண்டு.

“விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்” என ஒரு தனிப்பாடல் கூறும். அந்த விருத்தப்பாவுக்கு ஒரு தனிச்சிறப்பையும் புதுப்பொலிவையும் குறிப்பாக எண்சீர் விருத்தத்துக்கு ஒரு தனி மதிப்பையும் உருவாக்கிய பெருமை இவரைத்தான் சாரும்.

இயற்கை அழகுகளையெல்லாம் பண்டைய நூல்களிற் சுவைத்து மகிழ்ந்தோம். இடையில் அக் காட்சிகளை முழுமை பெறக் காண இயலாது தவித்தோம். பாரதிதாசன் மீண்டும் அவ்வெழிலோவியங்களையெல்லாம் நமக்குப் படைத்துக் காட்டியுள்ளார். அவ்வோவியங்கள் புதிய மெருகுடன் ஒளிவிட்டுக் காட்சியளிக்கின்றன. ‘அழகின் சிரிப்பு’ என்னும் நூலிலே இந்நூல் மொழி பெயர்க்கப்படுமானால் ‘நோபெல் பரிசில்’ பெறத்தகுதி வாய்ந்ததாகும் என அறிஞர் கூறுவர்.